”திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தவறு” - அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்
திருவள்ளுவர் திருநாள் விழா நேற்று தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத அர்லேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், வைக்கப்பட்டிருந்த பேனரில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போலவும், அவரது கைகள் மற்றும் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருப்பது போலவும் புகைப்படம் இடம்பெற்றிருந்த நிலையில், அது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. எனினும், இது முதல்முறை நடப்பதல்ல; ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தபோது, இந்த சர்ச்சை தொடர்சியாக நடைபெற்றே வந்திருக்கிறது. இதற்கு, அப்போது ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தரப்பில் கடுமையான கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் தான், நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் பயன்படுத்திய திருவள்ளுவர் புகைப்படத்துக்கு காவி உடை அணிவித்ததற்கு முதல் கண்டனக் குரல் திமுகவில் இருந்தே வந்தது. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ”எப்போதுமே மௌனமாக இருக்கிறவர் முதல்வராக இருக்கிறார் என்கிற தைரியத்தில், ஆளுநர் மாளிகையில திருவள்ளுவருக்கு மறுபடியும் காவி பெயிண்ட் அடித்து உள்ளனர். இப்போது மறுபடியும் தமிழர்களுடைய சுயமரியாதையை உரசிப்பார்க்கிறார்கள். வள்ளுவரை அவமதிக்கும் பாசிஸ்டுகளுக்கும் - அதை அனுமதிக்கும் சோஃபா மாடல் அரசுக்கும் என்னுடைய கடும் கண்டனங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
எனினும், தவெக தரப்பில் இருந்து இந்த விவகாரம் குறித்து எந்த விளக்கமோ அல்லது கண்டங்களோ தெரிவிக்கவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் தான், இந்த விவகாரம் தொடர்பான தவெகவில் இருந்து முதல் கண்டனக் குரல் அமைச்சர் அருண்ராஜிடம் இருந்து வந்திருக்கிறது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ”திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு! திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை.
அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவத்தை தான். அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்க படுத்தாதீர்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

