டெல்லி, மும்பையில் தாக்குதல் நடத்த திட்டம்.. தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு.. 9 பேர் கைது!
டெல்லி செங்கோட்டைக்கு முன்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்கொலை படை கார் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருந்தனர். இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் டெல்லியை சுற்றியுள்ள பிற பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐஎஸ்ஐ (ISI) பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 9 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதாக டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த 9 பேர் இந்தியாவின் டெல்லி மற்றும் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் முகாம்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தும் இறுதிக்கட்ட திட்டமிடலில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், இவர்களிடம் இருந்து நவீன துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் இந்தியாவின் பஞ்சாப், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருசிலர் நேபாள வம்சாவளியைச் சார்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, இவர்களுடன் சம்பத்தப்பட்ட வேறு யாரேனும் இந்தியாவில் இருக்கிறார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரகசிய தகவல்களின் அடிப்படையில் 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்தியாவில் நடத்த திட்டமிட்டிருந்த பெரும் சதியும் முறியடிக்கப்பட்டிருக்கிறது என டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

