பள்ளி, கல்லூரிகளில் சாதியின் பெயர்... தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? கேள்வி எழுப்பிய நீதிமன்றம்!
பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரி நியமித்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவங்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பியிருந்தது. மேலும், பள்ளி, கல்லூரிகளின் பெயரில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா எனவும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்ரவர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிந்து தெரிவிக்க மேலும் ஒரு காலம் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான நிலைப்பாட்டை தமிழக அரசு, நீதிமன்றத்தில் தெரிவிப்பதில் என்ன தயக்கம் உள்ளது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என இறுதி கெடு விதித்து வழக்கு விசாரணையை மார்ச் 6ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.