துரை வைகோ
துரை வைகோpt

அதிக தொகுதிகளைக் கேட்க திட்டம்... வரலாறு சொல்வதென்ன? மதிமுகவின் தேர்தல் அரசியல் ஒருபார்வை

சட்டமன்றத் தேர்தல் வந்தாலே தவறான முடிவுகளை எடுப்பார் என்கிற பிம்பம் 2021 தேர்தலில் தகர்ந்தது. வழக்கமான அதிரடியைக் கைவிட்டு நிதானத்தையும் பொறுமையையும் கைகொண்டார் வைகோ.
Published on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் பல்வேறு கட்சிகளும் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஈரோடு செங்கோடம்பள்ளத்தில், மதிமுகவின் 31ஆவது பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுக்குழு கூட்டத்தில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறும் வகையில், திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட வேண்டும் என்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஏற்கெனவே..,சி.பி.எம், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் இந்தமுறை அதிக தொகுதிகள் கேட்போம் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது மதிமுகவும் தங்களின் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறது அரசியல் அரங்கில் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது.

முன்னதாக மதிமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினருமான துரை வைகோவும் இதே கருத்தை தெரிவித்திருந்தார். “வரும் தேர்தலில் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதனால் கூடுதல் எண்ணிக்கை கேட்க வேண்டும் என்கிற ஆசை எங்களுக்கு இருக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியின் பொது நோக்கத்திற்கு எந்த பாதகமும் வந்து விட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டுதான் முடிவெடுப்போம். எங்களின் ஆசைகளை கருத்துக்களை பொதுக்குழுவில் கூறுவோம்” எனப் பேசியிருந்தார். கடந்த முறை ஆறு தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக, இந்தமுறை கூடுதல் இடங்களைக் கேட்பதோடு, தனிச்சின்னம் என்கிற கோரிக்கையையும் முன்வைக்கும் என்றே தெரிகிறது.., இந்நிலையில், மதிமுகவின் தேர்தல் பயணம் குறித்துப் பார்ப்போம்.

துரை வைகோ
காலி குடோனில் தாக்குதல் நடத்தியதா அமெரிக்கா.. யுரேனியம் விவகாரத்தில் புதுத்தகவல்!!

திமுகவிலிருந்து வெளியேற்றம் - புதிய கட்சி

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டபிறகு, 1994-ல் மதிமுகவைத் தொடங்கினார் வைகோ.., 1996-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்தான் அந்தக் கட்சிக்கு முதல் பொதுத்தேர்தல். திமுக அதிமுக இருவருக்கும் மாற்று ம.தி.மு.க-தான் என்கிற முழக்கத்தை முன்வைத்து தேர்தலில் களமிறங்கினார் வைகோ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டது ம.தி.மு.க. . ம.தி.மு.க கூட்டணியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஜனதா தளமும் தலா ஒரு இடத்தில் வெற்றிபெற 177 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. அந்தக் கட்சிக்கு 5.8 சதவிகித வாக்குகள் கிடைத்தன.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோpt web

2001 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை தி.மு.க உள்ளிட்ட பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்த ம.தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறியது. பா.ஜ.க போட்டியிட்ட 21 தொகுதிகளைத் தவிர்த்து, 211 தொகுதிகளில் போட்டியிட்டது ம.தி.மு.க. ஆனால், ஒரு இடத்தில்கூட அந்தக் கட்சி வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் 4.7 சதவிகிதமாகக் குறைந்தது. தொடர்ந்து, 2006-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியின் பக்கம் சென்றது மதிமுக. அதி.மு.க கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், ஆறு தொகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சி வெற்றிபெற்றது. வாக்கு சதவிகிதமும் பழையபடி 5.9 சதவிகிதமானது. தொடர்ந்து, அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவந்த ம.தி.மு.க., 2011 சட்டமன்றத் தேர்தலிலும் பழையபடி 35 தொகுதிகளை அ.தி.மு.க-விடம் முதலில் கேட்டது. ஆனால், 12 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என அ.தி.மு.க தரப்பில் பேச, சட்டமன்றத் தேர்தலையே புறக்கணிப்பதாக அறிவித்தார் வைகோ.

துரை வைகோ
இந்திரா எனும் ஆளுமை... செயல்களையும் பின்னணியையும் அலசும் விரிவான புத்தகம்

திமுக கூட்டணி... 

2016 தேர்தலிலும் திமுக, அதிமுக அல்லாத மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தார் வைகோ. அந்தத் தேர்தலில் 29 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. தொடர்ந்து, திமுக கூட்டணிக்கு வந்த மதிமுகவுக்கு 2021 தேர்தலில், ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன..,உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு நான்கு பேர் வெற்றிபெற்றனர். பல ஆண்டுகளுக்குப்பிறகு சட்டமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தது மதிமுக..,

சட்டமன்றத் தேர்தல் வந்தாலே தவறான முடிவுகளை எடுப்பார் என்கிற பிம்பம் 2021 தேர்தலில் தகர்ந்தது. வழக்கமான அதிரடியைக் கைவிட்டு நிதானத்தையும் பொறுமையையும் கைகொண்டார் வைகோ. கட்சியை சேர்ந்த நான்கு பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். இந்தநிலையில், வரும் தேர்தலில் அவர் என்ன மாதிரியான யுக்தியைக் கையாளப்போகிறார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

துரை வைகோ
தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் பந்தயம்.. முன்னணியில் மு.க.ஸ்டாலின்..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com