தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் பந்தயம்.. முன்னணியில் மு.க.ஸ்டாலின்..!
2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக லயோலா முன்னாள் மாணவர்கள் தொடங்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் அடுத்த முதல்வராக, மு.க. ஸ்டாலின் மீண்டும் வர வாய்ப்புள்ளதாக 77.83 விழுக்காடு பேர் தெரிவித்துள்ளனர். 73.80 விழுக்காடு பேர் எடப்பாடி பழனிசாமியும், 67.99 சதவீதம் பேர் உதயநிதி ஸ்டாலினும் அடுத்த முதல்வராகலாம் என கூறியிருக்கின்றனர். அதேசமயம், அண்ணாமலைக்கு 64.58 விழுக்காடு பேரும், விஜயிற்கு 60.58 சதவீதம் பேரும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்விக்கு, 17.7 சதவீதம் பேர் திமுக என்றும், 17.3 சதவீதம் பேர் அதிமுக என்றும், 12.20 பேர் தவெக என்றும், 5 சதவீதம் பேர் பாஜக என்று கூறியுள்ளனர்.
அரசின் நலத்திட்டங்களில் காலை உணவு திட்டத்திற்கு 72 விழுக்காட்டையும், மகளிர் உரிமை தொகைக்கு 62 விழுக்காட்டையும், மகளிர் விடியல் பேருந்து பயணத்திட்டத்திற்கு 56 விழுக்காட்டையும் மதிப்பீடாக மக்கள் மக்கள் வழங்கியுள்ளனர். அதேநேரம், அரசுத் துறைகளில் லஞ்சம், ஊழலைக் கட்டுப்படுத்துதல் நடவடிக்கை மோசம் என 81 விழுக்காட்டினரும் சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு மோசம் என 72 விழுக்காட்டினரும், மணல் கொள்ளையைத் தடுக்கும் நடவடிக்கைகள் மோசம் என 77 விழுக்காட்டினரும் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் கட்சி திமுக என்று 25.3 சதவீதம் பேரும், அதிமுக என 22.8 சதவீதம் பேரும், பாஜக என்று 15.7 சதவீதம் பேரும், தவெக என்று 11.2 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.