மயிலாடுதுறை | கவனிக்க ஆள் இல்லாததால் விரக்தி.. தம்பதியர் விபரீத முயற்சி – மனைவி பலி, கணவர் காயம்!
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை அருகே நீடூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன் (69). ஹோமியோபதி மருத்துவரான இவர், மயிலாடுதுறை திராவிடர் கழக நகர தலைவராக உள்ளார். இவருக்கு செந்தாமரை (59) என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மனைவி செந்தாமரை சிறுநீரக கோளாறால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
மகள்கள் மற்றும் மகனுக்கு திருமணமாகி மகள்கள் வெளியூரிலும் மகன் இனியவன் வீட்டின் மேல் பகுதியிலும் வசித்து வருகின்றனர். மூத்த தம்பதியரான இவர்களை கவனிப்பதற்கு ஆட்கள் இல்லாததால் மனமுடைந்து இருவரும் தற்கொலை முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை கேஸ் சிலிண்டரை திறந்தவிட்டு இளங்கோவன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்து தரைமட்டமானது. இதில், இளங்கோவன் செந்தாமரை இருவரும் படுகாயம் அடைந்தனர்.
சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி கலைவாணி, இளங்கோவனிடம் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை பொலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.