தென்காசி | பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த முன்னாள் பாஜக நிர்வாகி கைது
செய்தியாளர்: சு.சுந்தரமகேஷ்
தென்காசி மாவட்டம் புளியரை பகுதி தெற்கு மேட்டில் வசித்து வருபவர் குமார். இவர் தனது பக்கத்து வீட்டுப் பெண் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்ததை செல்போனில் படம் எடுத்துள்ளார். இதனை கண்ட அந்தப் பெண் அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து குமார் அங்கிருந்து ஓடியதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் புளியரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த குமாரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும், பாரதிய ஜனதா கட்சியில் முன்னாள் பட்டியல் அணியின் மாவட்ட தலைவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அவரை கைது செய்த காவல்துறையினர் தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.