மதுரை: கோபத்தில் போனை எடுக்காத காதலி - விரக்தியில் விபரீத முடிவெடுத்த கேரள ஐடி ஊழியர்
செய்தியாளர்: மணிகண்ட பிரபு
கேரள மாநிலம் ஆலப்புழா புலின்குன்னு காயல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், இவர், சவுதி அரேபியாவில் வேலை செய்து வரும் நிலையில், இவரது மகன் அருண் விஜய் (21), மதுரை பாண்டிகோயில் பகுதியிலுள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்ததோடு பிசிஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், அருண் விஜய் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்த நிலையில், இருவீட்டாரும் திருமணம் செய்து வைக்க ஒத்துக்கொண்டதால் கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசிக் கொண்டு வந்துள்ளனர். இதையடுத்து இருவரும் கடந்த 27ம் தேதி வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும் இணைப்பை துண்டித்த நிலையில், சிறிது நேரத்தில் ஐஸ்வர்யாவை, அருண் விஜய் தொடர்பு கொண்டுள்ளார்.
ஆனால், அவர் போனை எடுக்காததால் அவரை மிரட்டுவதற்காக தற்கொலைக்கு முயற்சிப்பதாக அருண்விஜய் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இது குறித்த தகவலை தெரிந்த ஐஸ்வர்யா, அருண் விஜயுடன் அறையில் தங்கியிருக்கும் நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவரது நண்பர்கள் அறைக்குச் சென்று பார்த்தபோது, அருண் விஜய் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாட்டுத்தாவணி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.