மதுரை | ஜேசிபி-யால் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சுக்குநூறாக்கிய 17 வயது சிறுவன்! போதையில் ரகளை?
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரை மாநகர் செல்லூர் பகுதியில் 17வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் ஜேசிபி இயந்திரத்தை எடுத்துச் சென்று செல்லூர் 50 அடி சாலையில் இருந்து கண்மாய் கரை சாலை வரை அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் மற்றும் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார், ஆட்டோக்கள், பைக்குகள் என 10க்கும் மேற்பட்ட வாகனங்களை நொறுக்கியுள்ளார். இதில்,; வாகனங்கள் முழுவதும் சேதமடைந்தன,
இதையடுத்து இரும்புக் கடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி மீது ஜேசிபி வாகனம் மூலம் சரக்கு வாகனத்தை தூக்கிச் சென்று மோத முயற்சி செய்துள்ளார். நல்வாய்ப்பாக காவலாளி தப்பினார், இதைத் தொடர்ந்து மக்கள் துரத்திச் சென்ற நிலையிலும் தொடர்ந்து ஜேசிபி வாகனத்தை இயக்கிவாறு வாகனங்களை சேதப்படுத்திய சிறுவன், ஆட்டோக்கள் மீது மோதி நின்றுள்ளார்.
இந்நிலையில் சிறுவனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த பொதுமக்கள் புகார் அளிக்கப்படாத நிலையில், சிறுவனிடம் செல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜேசிபி இயந்திரத்தின் கீளினராக இருந்த சிறுவன் போதையில் ஜேசிபி வாகனத்தை இயக்கிய மற்ற வாகனங்களை சேதப்படுத்தியதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.