கழிவறை
கழிவறைஎக்ஸ் தளம்

ஒருநாளுக்கு எத்தனை முறை மலம் கழிப்பது நல்லது? ஆய்வு சொல்லும் முக்கிய தகவல்

ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒரு வாரத்துக்கு எத்தனை முறை மலம் கழிக்க வேண்டும், எவ்வளவு இடைவெளியில் மலம் கழிப்பது நல்லது என்பது போன்ற சந்தேகங்கள் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்த குழப்பங்களுக்கு விடை தருகிறது இந்த தொகுப்பு...
Published on

மலம் கழிக்கும் எண்ணிக்கையும் இடைவெளியும் எல்லோருக்கும் ஒன்றுபோல் இருப்பதில்லை. இருப்பினும், பொதுவாக ஒரு நாளுக்கு ஒரு முறையாவது மலம் கழிப்பது இயல்பானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க நுண்ணுயிரியல் நிபுணரான சான் கிப்பன்ஸ், ஒரு நாளுக்கு ஒன்று முதல் மூன்று முறை மலம் கழிப்பவர்களின் குடலில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் இருப்பதை தனது ஆய்வில் உறுதிபடுத்தியுள்ளார். தினசரி அல்லாமல், ஒரு வாரத்துக்கே மூன்று முறைக்கும் குறைவாக மலம் கழிப்பவர்களின் இரத்தத்தில் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் மற்றும் அல்சைமர் நோயோடு தொடர்புடைய நச்சுக்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதையும் கண்டுபிடித்துள்ளார்.

மலச்சிக்கல் உள்ளவர்களின் குடலில் மலம் நீண்டகாலம் தங்கிவிடுவதே, இரத்தத்தில் அதிக நச்சுக்கள் உண்டாகக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவேதான், ஒரு நாளுக்கு இரண்டு முறை முதல் ஒரு நாள்விட்டு ஒரு நாள் வரை மலம் கழிப்பது ஆரோக்கியமான சிறந்த பழக்கமாக இருக்கலாம் என்கிறார் நுண்ணுயிரியல் நிபுணரான சான் கிப்பன்ஸ்.

கழிவறை
கழிவறைஎக்ஸ் தளம்

அண்மையில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வு, வாரத்திற்கு 7 நாட்களும் இயல்பான மலம் கழித்தவர்களோடு ஒப்பிடுகையில், வெறுமனே 4 முறை மலம் கழிப்பவர்களுக்கு வாழ்நாள் குறைவு என்று தெரிவிக்கிறது. அதேபோல, அதிக இடைவெளியில் மலம் கழிப்பவர்கள் புற்றுநோயால் இறப்பதற்கு 2.42 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இதயம் தொடர்பான நோய்களால் உயிரிழப்பதற்கு 2.27 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

எப்போதெல்லாம் மலம் கழிக்கிறோம், எத்தனை முறை மலம் கழிக்கிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. மலத்தின் நிறம் மற்றும் வடிவத்தையும் கவனிக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். ஆரோக்கியமான டைப் 3 அல்லது டைப் 4 என்று வகைப்படுத்தப்படும் மிருதுவான சாசேஜ் வடிவில் மலம் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் மலம் இருந்தால் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாகவும்கூட இருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். அடிக்கடி பேதி ஏற்படுவது, உணவு உட்கொண்ட பிறகு வயிறு கனத்திருப்பது போன்ற உணர்வு மற்றும் வாயுத் தொந்தரவு இருந்தால் கட்டாயமாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை செய்வது நல்லது என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள்.

கழிவறை
பொது இடத்தில் மலம் கழித்தால் ரூ.5000 அபராதம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com