RIP Vijayakanth | போய் வாருங்கள் கேப்டன்... விஜயகாந்த் கடந்து வந்த பாதை..!

1980களில் புரட்சிக்கலைஞராக வலம் வந்த விஜயகாந்த், 90களில் கேப்டனாக மாறினார். அதுவரை யாருக்கும் இல்லாத அளவுக்கு இவரது 100வது படமாக கேப்டன் பிரபாகரன் திரையரங்களில் 200 நாட்களை கடந்து ஓடியது. அதுமுதல் கேப்டனாக கொண்டாடப்பட்டார் விஜயகாந்த்.
விஜயகாந்த்
விஜயகாந்த்புதியதலைமுறை

விஜயகாந்த்..

தமிழ்நாட்டில் இந்த பெயரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ்நாட்டு அரசியலில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு திரைத்துறையில் இருந்து அரசியலில் முக்கிய வெற்றியை பெற்றது விஜயகாந்த் மட்டுமே.

சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தமிழ்நாட்டு மக்களால் தர்மதுரை, கருப்பு எம்.ஜி.ஆர், கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று கொண்டாடப்பட்டு வரும் விஜயகாந்த்தை அவரது 71வது வயதில் தன்னோடு அழைத்துக்கொண்டுள்ளது இயற்கை. அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நேரத்தில், விஜயகாந்த் என்ற வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களை சற்றே புரட்டிப்பார்க்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

மதுரை திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு பிறந்த விஜயகாந்த், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருந்தார். சினிமாவில் ஏற்பட்ட காதல், அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை தியாகராய நகரில் தங்கி படவாய்ப்பு தேடிய அவர், ஏறி இறங்காத இடம் இல்லை. அனைத்து தயாரிப்பாளர்களின் வாசல்களிலும் ஏறி இறங்கியவர் தொடக்கத்தில் நிறத்தால் ஒதுக்கப்பட்டார்.

அத்தனை அவமானங்கள், நிராகரிப்புகளையும் தாண்டி இனிக்கும் இளமை படத்தின் மூலம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். தொடக்க காலத்தில் படங்கள் சரிவர ஓடாத நிலையில், அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது தூரத்து இடி முழக்கம். அப்போதுதான் விஜயராஜ் என்ற அவரது பெயர் விஜயகாந்த் ஆகவும் மாறியது.

விஜயகாந்த்
🔴LIVE | RIP Vijayakanth | காற்றில் கரைந்தது கருப்பு நிலா....

அடுத்தடுத்த படங்களில் படக்குழுவுக்கு லாபத்தை கொடுத்த விஜயகாந்த், ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்களுக்கும் ஆதர்சன நாயகனாக மாறினார். தனது அடுத்தடுத்த படங்களில் சமூக சீர்த்திருத்தங்களை பேசிய விஜயகாந்த், திரைத்துறையிலும் ஆகப்பெரும் திருத்தங்களை மேற்கொண்டார். படத்தின் நாயகன் என்ன சாப்பிடுகிறாரோ, அதையே படத்தில் பணியாற்றும் கடைக்கோடி ஊழியர்வரை சாப்பிட வேண்டும் என்ற முறையை கொண்டுவந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த்
விஜயகாந்த்கோப்புப்படம்

சினிமாவில் எண்டிரியான முதல் 10 ஆண்டுகளில் மட்டும் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார். காலையில் தஞ்சாவூர், இரவு சேலம், மறுநாள் காலை வேறு இடத்தில் சூட்டிங் என்று நடித்தவர் ஒரே வருடத்தில் மட்டும் 18 படங்களில் நடித்து சாதித்திருந்தார்.

தற்போது சினிமாவில் கோலோச்சி வரும் விஜய்யின் திரைப்பயணத்தில் விஜயகாந்த்துக்கு அளப்பெரிய பங்குண்டு என்பதை மறுக்க முடியாது. இதனால்தான், நட்பு, மரியாதை, நன்றி ஆகியவற்றின் மொத்த உருவம்தான் விஜயகாந்த் என்று உச்சிமுகர்ந்து பேசுகிறார் எஸ்.ஏ.சி. தனது படங்களில் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்திய அவர், பேரிடர் காலங்களில் பெரிய அளவில் நிவாரண நிதிகொடுத்து உதவினார். இதனாலே,

சினிமாவில் அள்ளிக்கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.. அதனை எங்களுக்கு சொல்லிக்கொடுத்தவர் விஜயகாந்த்

சத்யராஜ்

என்று ஏறும் மேடைகளில் எல்லாம் கூறியுள்ளார் சத்யராஜ்.

1980களில் புரட்சிக்கலைஞராக வலம் வந்த விஜயகாந்த், 90களில் கேப்டனாக மாறினார். அதுவரை யாரும் இலலாத அளவுக்கு இவரது 100வது படமாக கேப்டன் பிரபாகரன் திரையரங்களில் 200 நாட்களை கடந்து ஓடியது. அதுமுதல் கேப்டனாக கொண்டாடப்பட்டார் விஜயகாந்த்.

விஜயகாந்த்
மூச்சுவிட சிரமம்.. உடல்நிலையில் பின்னடைவு... விஜயகாந்த்-க்கு தீவிர சிகிச்சை!

அவரது அரசியல் வரலாற்றின் தொடக்கப்புள்ளி என்றால், அது 1979ல் உருவாக்கப்பட்ட தென்னிந்திய விஜயகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்தான். தொடக்கத்தில் ‘தமிழன் என்று சொல்லடா.. தலைநிமிர்ந்து நில்லடா’ என்று முழங்கியது ரசிகர் மன்ற படை.. இலவச வேட்டி சேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சைக்கிள், தையல் மிஷன்கள், மாணவர்களுக்கு கணிணி பயிற்சிகள், இலவச திருமணங்கள் என்று 80களில் இருந்தே கொடை வள்ளலாக மாறினார்.

எத்தனை உச்சிக்கு சென்றாலும், கடைக்கோடி கிராமத்தில் இருப்பவர்களிடமும் வாஞ்சையோடு பழகினார். சிறந்த நிர்வாகி என்பதற்கு எடுத்துக்காட்டாக, 1999ல் நடிகர் சங்கத்தலைவராக பொறுப்பேற்று சங்கத்தின் கடனை அடைத்தார் விஜயகாந்த். தமிழ்நாட்டு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஜாம்பவான்கள் இருந்தபோதே, துணிச்சலாக அரசியலில் களமிறங்கி இருபெரும் கட்சிகளையும் ஆட்டம்காணவைத்தார் விஜயகாந்த். 2005ம் ஆண்டு தேமுதிக எனும் கட்சியை தொடங்கிய அவர், 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்டு 8 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தன்வசமாக்கினார். அது தொடங்கி 2011ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 தொகுதிகளில் வென்று எதிர்க்கட்சித்தலைவராக அமர்ந்தார் விஜயகாந்த்.

அடுத்தடுத்த காலங்களில் பல வீழ்ச்சிகள், சூழ்ச்சிகள் இருந்தாலும், விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்காக இன்றளவும் தேமுதிகவுக்கு பலர் ஆதரவாக நிற்கின்றனர். உடல்நலக்குறைவால கடந்த சில ஆண்டுகளாக ஓய்வெடுத்து வந்த அவர், இன்றோடு மண்ணுலக பயணத்தை முடித்துக்கொண்டுள்ளார்.

கருணை.. தைரியம்.. துணிச்சல்.. நட்பு.. அன்பு என்று அனைத்திற்கும் உதாரணமாக திகழும் கேப்டன் விஜயகாந்த் சாமானியர்களின் நெஞ்சத்தில் என்றென்றும் மன்னன் என்பதில் சந்தேகமில்லை.. சென்று வாருங்கள் கேப்டன்... என்றும் என்றென்றும் எங்கள் மனதில் இருப்பீர்கள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com