திருமாவளவன், பெ. சண்முகம், அதியமான்
திருமாவளவன், பெ. சண்முகம், அதியமான்எக்ஸ்

தூய்மைப்பணியாளர்கள் பணிநிரந்தரம் | திருமா, அதியமான் கருத்துக்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு - ஏன்?

தூய்மைப் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என திருமாவளவன் மற்றும் அதியமான் பேசி இருக்கும் நிலையில் இந்த கருத்துக்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
Published on

-சீ. பிரேம்

Summary

தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என்று திருமாவளவன் மற்றும் அதியமான் கூறியுள்ள நிலையில் அதற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்டோர் இதற்கு எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்.

தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான் ஆகியோர் பேசியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது. தூய்மைப்பணியாளார்களை பணிநிரந்தரம் செய்யும்போது தூய்மைப்பணியை அதிகமாக செய்யும் ஒடுக்கப்பட்ட மக்களே பொருளாதார ரீதியாக முன்னிலைக்கு வரமுடியும். அப்படி இருக்கையில், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை பிரதானமாக பேசும் இந்த இரு இயக்கங்களும் தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது என தூய்மைப்பணியாளர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகும்படியாக பேசியிருப்பதாக இடதுசாரி கட்சிகள் பல தரப்பினரும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது எனப் பேசிய திருமாவளவன் மற்றும் அதியமான் குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.

தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும் திருமாவளவன், அதியமான் இருவரின் கருத்து குறித்தும் கருத்துக்கான விமர்சனங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்..

திருமாவளவன், பெ. சண்முகம், அதியமான்
தூய்மை பணியாளர்கள் போராட்டம்| நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய தேவை என்ன?

தூய்மைப்பணியாளர்கள் போராட்டமும் காவல்துறையின் கைதும்...

சென்னையின் ரிப்பன் மாளிகையின் முன்பு பணி நிரந்தரம் கோரியும், தனியார்மயப்படுத்துதலை எதிர்த்தும் தூய்மைப்பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் போராடி வந்தனர். இதற்கிடையில் அரசுக்கும் தூய்மை பணியாளர் தரப்புக்கும் பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனாலும், சுமூகமான முடிவுகள் எட்டப்படவில்லை. 13வது நாளை போராட்டம் எட்டியிருந்த நிலையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நள்ளிரவு நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி தூய்மைப் பணியாளார்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.

தூய்மை பணியாளர்கள் கைது
தூய்மை பணியாளர்கள் கைதுpt web

கைது நடவடிக்கையில் தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்களை காவல்துறையினர் தாக்குவது போன்ற வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. இந்த நடவடிக்கைக்கு எதிராக பல தரப்புகளில் இருந்தும் ஆளும் திமுக அரசுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின. இந்த சூழலில் தமிழக அரசு, தூய்மை பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படும் என 6 சிறப்பு திட்டங்களை அறிவித்தது. ஆனால், அவர்களின் பிரதான கோரிக்கையான தூய்மைப் பணியாளர்களை தனியாருக்கு கீழ் கொண்டு வராமல் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

திருமாவளவன், பெ. சண்முகம், அதியமான்
’தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது..’ - திருமாவளவன் மாற்றுக் கருத்து

தூய்மைப்பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கூடாது ! 

சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற தன்னுடைய பிறந்தநாள் விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், குப்பை அள்ளுபவர்களை பணி நிரந்தரம் செய்து நீங்கள் குப்பையை மட்டுமே அள்ளுங்கள் என்று சொல்வதில் உடன்பாடு இல்லை. அவர்களின் தரம் உயர வேண்டும். இது தான் மாற்று சிந்தனை. குப்பை அள்ளுபவர்களின் பிள்ளைகள் தான் குப்பை அல்ல வேண்டுமா? இந்த தலைமுறை அந்த தொழிலை செய்தால் அடுத்த தலைமுறை உயர வேண்டும் என்பது தானே சமூகநீதி” என்று பேசினார்.

தூய்மை பணியாளர்கள் குறித்து திருமாவளவன்
தூய்மை பணியாளர்கள் குறித்து திருமாவளவன்web

ஆதித்தமிழர் கட்சியின் அறிக்கை:

திருமாவளவனின் கருத்தை தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் சார்பிலும் இதே கருத்தை வலியுறுத்தி அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர், அருந்ததியர் சமூகங்களை குலத்தொழிலுக்கே கொண்டு செல்லும். பணிநிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும், என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்web

தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம். தூய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது அதை வரவேற்கிறோம். சுயமரியாதையுடன் வாழ்வதற்கு குலத்தொழில் இருந்து வெளியேறுவது சரியானதாகும். பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன், பெ. சண்முகம், அதியமான்
’திமுகவின் பாவ மூட்டைகளை நீங்கள் சுமக்காதீர்கள்..’ - திருமாவளவனுக்கு EPS அட்வைஸ்

இவ்வாறு, ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களின் குரலாக அறியப்படும் இந்த இரண்டு இயக்கங்களும் தூய்மைப்பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்னும் நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.

திருமாவளவனின் நிலைபாடு தவறு..! - பெ.சண்முகம்

திமுக கூட்டணியின் அங்கமாக இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் எதிர்வினையாற்றி இருக்கிறார். பத்திரிக்கையாளார்களிடம் பேசிய பெ. சண்முகம் கூறியதாவது, “நான் திருமாவளவன் கருத்தை ஏற்கவில்லை. தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கூடாது என திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல. எனக்கு தெரிந்த ஒரு பெண்ணின் பெற்றோர் இருவரும் தூய்மைப் பணியாளர்கள். நிரந்தர பணியாளர்களாக அவர்கள் இருந்ததால், அதில் கிடைக்கும் வருமானம் மூலம் அப்பெண்ணை நன்றாக படிக்க வைத்தனர்.

இதனால் அப்பெண் இன்று முனைவர் பட்டம் பெற்று கல்லூரி பேராசிரியராக இருக்கிறார். ஒருவேளை அவர்களுக்கு நிரந்தரப் பணி இல்லையென்றால், பெற்றோர்களுக்குப் பின் அந்தப் பெண்ணும் தூய்மைப் பணிக்கே வந்திருப்பார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
பெ.சண்முகம்கோப்புப்படம்

பணி நிரந்தரம் செய்யப்பாட்டால் அதில் கிடைக்கும் ஊழியம், சலுகைகளால் அடுத்த தலைமுறை முன்னேற்றம் அடையும். நாம் ஒன்றும், பரம்பரையாக ஒரு குடும்பத்துக்கு தூய்மைப் பணியாளர் பணியை வழங்க வேண்டும், இதே வேலையை பரம்பரையாக அவர்களுக்கு நிரந்தரம் செய்யவேண்டும் எனக் கேட்கவில்லை. இப்போது பணியில் உள்ளவர்களை நிரந்தரம் செய்யவே கேட்கிறோம்” என்று பேசினார். மேலும் பணிநிரந்தரம் செய்ய வேண்டாம் என்றால் ஒப்பந்தப் பணியாளராக மட்டும் செயல்படலாமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இவ்வாறு திருமாவளவனின் கருத்து தவறு என திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளே விமர்சனங்களை முன் வைப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com