’திமுகவின் பாவ மூட்டைகளை நீங்கள் சுமக்காதீர்கள்..’ - திருமாவளவனுக்கு EPS அட்வைஸ்
தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் நேற்று செங்கம் பகுதியில் மக்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை திமுகவின் பாவ மூட்டைகளை நீங்கள் சுமக்காதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.
திமுகவின் பாவ மூட்டைகளை நீங்கள் சுமக்காதீர்கள்..
செங்கத்தில் மக்களிடையே பேசிய அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “திருமாவளவன் அவர்களே அந்த பாவ மூட்டைகளை நீங்க சுமக்காதீங்க. திமுக செய்யக்கூடிய பாவ மூட்டைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுமக்க வேண்டாம் என்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுகிறேன்.
மதுவை ஒழிப்போம் என்று சொன்னார், அதற்காக மாநாடு ஒன்றையும் நடத்தினார். ஆனால் திமுக கொடுத்த நெருக்கடியில், அந்த மாநாட்டிற்கு மது ஒழிப்போம் என்று வைக்கப்பட்ட பெயரை நீக்கிவிட்டு, போதைப்பொருள் ஒழிப்போம் என்று மாற்றிவிட்டார். பின்னர் மேடையில் திமுக நிர்வாகிகளையே ஏற்றி பேசவைத்தார். பாவம் திருமாவளவன் சேரக்கூடாத இடத்தில் சேர்ந்துவிட்டார். அவருக்கு வேறு வழியில்லை, கூட்டணி வைத்துவிட்டோம் என்ற ஒரு காரணத்திற்காக அவர்கள் சொல்வதையெல்லாம் அறிக்கை வாயிலாக இவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
திருமாவளவன் அவர்களே உங்களுக்கென்று மக்களிடத்தில் ஒரு மரியாதை இருந்துகொண்டு இருக்கிறது. இப்படி திமுகவின் பாவ மூட்டையை நீங்கள் சுமந்துகொண்டு கருத்துகளை வெளியிட்டுக்கொண்டிருந்தால் உங்களுடைய நிலை தலைகீழாக மாறும்” என்று அட்வைஸ் செய்துள்ளார்.