“மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது... தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?”- முதலமைச்சர் ஸ்டாலின்

“மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது... தமிழர்கள் எப்படி நம்புவார்கள்” என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின் - எல் முருகன் - பிரதமர் மோடி
முதலமைச்சர் ஸ்டாலின் - எல் முருகன் - பிரதமர் மோடிபுதிய தலைமுறை

நேற்று பிரதமர் மோடி வருத்தம்...

தமிழக பாஜக பூத் தலைவர்களுடன் நமோ செயலி வாயிலாக "எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றினார்.

அப்பொழுது அச்செயலியின் வாயிலாக பேசுகையில், "எனக்கு தமிழ் தாய்மொழியாக கிடைக்காதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தமிழில் என்னால் பேச முடியவில்லை என்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழின் பெருமைகளை உரக்க சொல்ல வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பதில்....

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று தனது X வலைதளப்பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர்,

நேற்று மாலைச் செய்தி: தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருந்துகிறார் பிரதமர் மோடி!

நேற்று காலைச் செய்தி: அழகிய தமிழ்ச்சொல் 'வானொலி' இருக்க ஆகாசவாணி என்பதே பயன்பாட்டுக்கு வரும்.

மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது! தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?

கெட்டிக்காரன் புளுகாவது எட்டு நாள் நிற்கும்; ஆனால், மோடியின் கண்ணீர்?

ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த அவர் இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன?

முதலமைச்சர் ஸ்டாலின் - எல் முருகன் - பிரதமர் மோடி
மக்களவைத் தேர்தல் 2024: சேலம் காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் முக.ஸ்டாலின்

பிரதமர் மோடி அவர்களே...

  • கருப்புப் பணம் மீட்பு,

  • மீனவர்கள் பாதுகாப்பு,

  • 2 கோடி வேலைவாய்ப்பு,

  • ஊழல் ஒழிப்பு போல்

காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான்,

  • அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு!

விமானங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை.

‘எங்கும் இந்தி! எதிலும் இந்தி!’ என மாற்றியதுதான் மோடி அரசின் அவலச் சாதனை!

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும்!” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ட்விட்டர் மற்றொரு பதிவிட்டுள்ளார். அதில்,

“மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி ஜி அவர்கள் இந்தியை பரப்புவதாக ஒரு பொய் செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் பரப்பி வருகிறார். பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தமிழில் பேச ஆரம்பித்தால், உங்களைப் போன்ற ‘போலி திராவிட மாடல்’ ஆட்சியாளர்களுக்கு, மீண்டும் மீண்டும் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பே கிடைக்காது என்பதுதான் உண்மை. இந்த உண்மையை, இன்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சாமானிய மக்களும் உணர்ந்துள்ளார்கள்.

எல். முருகன்
எல். முருகன்புதிய தலைமுறை

அதன் விளைவே உங்களின் இந்த அறிக்கை என்பதையும் உணர்கிறேன். இதுவரை எந்தவொரு மத்திய அரசும் செய்யாத அளவிற்கு, தமிழுக்கு அரும் பெரும் தொண்டாற்றி வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழுக்கு செய்த தொண்டுகளை பட்டியலிடுகிறேன்..!

கடந்த காலங்களில், பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று வரும் நமது பாரதப் பிரதமர் அவர்கள், திருக்குறள் உள்ளிட்ட தமிழின் தொன்மைக்கால இலக்கியங்கள் ஒவ்வொன்றையும் உலக அரங்கில் முன்மொழிந்து வருகிறார் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பார்ப்பதில்லையா..?

முதலமைச்சர் ஸ்டாலின் - எல் முருகன் - பிரதமர் மோடி
"முதல்வரின் இந்த செயல் போலி திராவிட மாடல் என்பதை காட்டுகிறது"- எல். முருகன் விமர்சனம்

கடந்தாண்டு பொதுத்தேர்வு எழுதுகிற மாணவர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர், நமது தேசத்தின் மிகவும் தொன்மையான மொழி தமிழ்தான் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டும் வண்ணம், ‘காசித் தமிழ்ச் சங்கமம்’ விமரிசையாக நடத்தப்பட்டது என்பதெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவில்லையா?

நாடாளுமன்றம் புதிய கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல், சென்னையில் செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் என்று, தமிழ் மொழி முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதை கவனிப்பதில்லையா? மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது சிஆர்பிஎப் போன்ற தேசிய அளவிலான தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை.

மத்திய தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்தான் எல்லாம் என்று இத்தனை ஆண்டு காலமாக பொய் சொல்லியே தமிழ் மக்களை ஏமாற்றி வந்த உங்களால், உங்களின் கட்சிக்காரர்கள் நடத்துகிற தனியார் பள்ளிகளில் தமிழை கட்டாய மொழியாக்க முடிந்ததா..? கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால், உங்கள் கட்சி தொடங்கிய காலத்திலிருந்து தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் உங்களைப் பற்றி சுயபரிசோதனை செய்து பாருங்கள் மாண்புமிகு முதல்வர் அவர்களே..!” என்றுள்ளார் காட்டமாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com