அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர்? கே.பி. முனுசாமி மழுப்பல் பதில்!

பாஜக உடன் கூட்டணி இல்லையெனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மழுப்பல் பதில்.

கிருஷ்ணகிரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலேயே கூட்டணி அமையும். பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு; அதனை இபிஎஸ் ஏற்றார்.

கே.பி.முனுசாமி
கே.பி.முனுசாமி

பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை; தேர்தல் வந்தால் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்துவிடும் என அமைச்சர் உதயநிதி கூறுவது நடக்காது. அதிமுக மீதான அச்சத்தில், நாங்கள் மீண்டும் பாஜகவுடன் சேர உள்ளதாக சிலர் கூறுகிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை மாற்றும் கோரிக்கையை வைப்பது சிறுபிள்ளைத்தனமானது. அண்ணாமலையை மாற்றக்கோருவது எங்கள் எண்ணம் இல்லை; நாகரீகமான தலைவர்கள் எங்களிடம் உள்ளனர்.

பாஜக உடனான கூட்டணி முறிவு பற்றி காலம் வரும் போது எடப்பாடி பழனிசாமி கருத்து கூறுவார். அதிமுக என்பது ஜனநாயக இயக்கம். பொதுச்செயலாளரின் கருத்தையே நான் கூறுகிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக இருப்பார்.

மக்கள்தான் எங்கள் எஜமானர்கள்; மக்கள் நலனை முன்வைத்தே எங்கள் குரல் ஒலிக்கும்” என்றார்.

அவரிடம் மேலும், ‘பாஜக உடன் கூட்டணி இல்லையெனில் அதிமுக ஆதரிக்கும் பிரதமர் வேட்பாளர் யார்’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மழுப்பலாக பதிலளித்த அவர், “ஒடிசாவில் பிஜூ ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் எந்த கட்சியையோ, பிரதமர் வேட்பாளரையோ ஆதரிப்பதில்லை” என்றார்.

கே.பி. முனுசாமி
"பிரதமர் மோடி ஆட்சிக்கு 10-க்கு 8 மதிப்பெண்கள்" - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com