"சாதிய சமூகத்தை சவுக்கால் அடிக்கும் டியூட்.. `அவ்வளவு ஆணவம் இருந்தா..’" - பாராட்டிய திருமா | Dude
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கி வெளியான படம் `டியூட்'. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே, டிராகன் பட வெற்றியை தொடர்ந்து டியூட் படமும் ரூ.100 கோடியை கடந்து வசூல் சாதனையில் ஹாட்ரிக் அடித்திருக்கிறது. இந்த சூழலில் இப்படத்தின் சிறப்பு காட்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பார்த்து படத்தின் இயக்குநரைப் பாராட்டியுள்ளார்.
அவர் பேசிய போது "காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் ஆணவக் கொலைக்கும் எதிராக பேசுகிறது. காதலுக்கு சாதி, மதம், பெருளாதாரம் போன்ற எந்த வரையறையும் தேவை இல்லை, இரு மனங்கள் போதும் என்ற வரையறையை முன்னிறுத்தி இந்த திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கி இருக்கிறார். தொடக்கத்திலிருந்து கடைசி வரை பார்வையாளர்கள் வியக்கும்படி காட்சிகள் உள்ளன. அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை திரைப்படத்தின் ஓட்டம் உருவாக்குகிறது. இறுதியாக இது எப்படி போய் முடியும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகிறது.
நகைச்சுவை ததும்ப அதே சமயம் சமூகத்தில் நாம் நாள்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிற மிகப்பெரும் சிக்கலை மையமாகக் கொண்டு திரைப்படத்தை கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கிறார். இந்த தலைமுறைக்கு தகுந்த படி அவர் இயக்கி இருப்பது அவருடைய படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறது. இந்த தலைமுறையின் உளவியலையும் அவர் நன்றாக உள்வாங்கி இருக்கிறார் என்பதற்கு இந்தப்படம் சான்றாக உள்ளது. ஜென் Z கிட்ஸ் என சொல்லக்கூடிய இந்த தலைமுறையினர் கையாளக்கூடிய நட்பு - காதல் இரண்டுக்குமான புரிதலையும் வெகு சிறப்பாக கையாண்டிருக்கிறார்.
நட்பு வேறு காதல் வேறு என்றாலும் காதலுக்கு நட்புதான் அடிப்படையானது 'பிரண்ட்ஷிப்தான் லவ்' என்று ஒரு இடத்திலே கதாநாயகருடைய நண்பன் பேசுகிற ஒரு வசனம் இருக்கிறது, 'இப்ப நான் நட்பா பழகிட்டேன். எந்த பீலிங்கும் எனக்கு இல்ல, ஜீரோ பீலிங் உன்னோட எப்படி நான் வாழ முடியும்?' என்கிற ஒரு இடத்தில் நட்புக்கு மிக உயர்ந்த மரியாதையைத் தருகிறார். அந்த நட்புதான் காதலுக்கு அடிப்படையாக இருக்கிறது என்பதை அடுத்தடுத்து வரக்கூடிய காட்சியில் பதிவு செய்கிறார். இப்படத்தை நடைமுறை சாத்தியம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பலாம். ஆனால் இதை ஒரு விவாதமாக்கி இருக்கிறார் அல்லது இதை வெளிச்சப்படுத்தி இருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
இப்படத்தின் இறுதிக் காட்சியில் `அவ்வளவு ஆணவம் இருந்தா நீங்க போய் சாவுங்கடா' என்று வரும் வசனம், சாதிய சமூகத்தை சவுக்கால் அடிக்கும் வசனம். ஆணவக் கொலையை நியாபப்படுத்துகிற கும்பலுக்கு புத்தி புகட்டுவதாக இருக்கிறது. ஒரு செய்தியை எப்படி திரை மொழி மூலம் சொல்ல முடியும், அழுத்தமாக, இந்த தலைமுறை புரிந்து கொள்ளும்படி சொல்ல முடியும் என்பதை கீர்த்தீஸ்வரன் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு ஏற்ப பிரதீப் நடிப்பும், படக்குழுவினர் அத்தனை பேரின் ஆதரவும் இருந்திருக்கிறது. இவர்களின் கைகளில் தான் இந்த திரையுலகம் இருக்கிறது என்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்." என்றார்.

