Baahubali The Epic | பாகுபலி 3 வருகிறதா? பாகுபலியை கொன்ற கட்டப்பா.. பின்னிருக்கும் சுவாரஸ்யம்!
பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக `Baahubali: The Epic' நாளை வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டையொட்டி, ராஜமௌலி, பிரபாஸ், ராணா இணைந்து உரையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பாகுபலி படம் உருவான விதம், படப்பிடிப்பு, மறக்க முடியாத தருணங்கள் எனப் பலவற்றை பகிர்ந்துள்ளார். முக்கியமாக Baahubali: The Epic பற்றியும் அடுத்து உருவாகும் Baahubali படம் பற்றியும் கூறியிருக்கிறார்கள்.
பாகுபலி இரு பாகங்களானது பற்றி கூறிய ராஜமௌலி "இந்தப் படத்தை இரண்டு பாகங்களில் எடுக்கும் ஐடியாவே அப்போது இல்லை. கதை வளர்ந்து கொண்டே இருக்க, இதனை இரு பாகங்களாக எடுத்தால் என்ன? என யோசித்தோம். அப்போது எல்லாம் சரியாக அமைந்தது. ஆனால் எப்படி எடுப்பது. அப்போது நாம் படத்திற்கு திட்டமிட்டதே 120 கோடி. அதுவே என் கரியரில் அதிக பட்ஜெட்டில் எடுத்த படத்தை (மகதீரா) விட 40 கோடி அதிகம். இனி இரண்டு பாகம் என்றால் பட்ஜெட்டுக்கு எங்கு செல்வது. ஒருவழியாக பேசி பேசி இதை சாத்தியமாக்கினோம் என்றார்.
தொடர்ந்து காளகேயர் போர் காட்சி பற்றி பேசியவர் "இப்படத்தின் போர் காட்சிகளை இடைவேளையே இல்லாமல் மொத்தம் 70 நாட்கள் எடுத்தோம். அது மிகவும் கடினமாக இருந்தது. அந்தக் காட்சிகளை எடுக்கும் சமயத்தில், ஹோலி பண்டிகை வந்தது. யாராவது ஹோலி கொண்டாடுகிறேன் என கலர் பொடியை தூவினால் டென்சன் ஆகிவிடுவேன் என கண்டிப்பாக சொன்னேன். ஏனென்றால் காலகேயர் மேல் கலர் பொடி இருந்தால் ஷூட் யாரை வைத்து எடுப்பது. நான் சொல்லிவிட்டேன் என்பதால் அவர்கள் அனைவரும் ஹோலியை கருப்பு பொடியை தூவி கொண்டாடினார்கள்" என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய பிரபாஸ் "முதல் பாகம் ரிலீஸ் ஆக 12 தினங்கள் முன்பு, இவரிடம் (ராஜமௌலி) என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டால், இல்லை இடைவேளையில் போது ஒரு சிலை வருமாறு காட்சி எனக்கு வேண்டும் என்கிறார். படத்தில் பெரிதும் பேசப்பட்ட பல்வாள் தேவனுடைய சிலையை விட, பின்னால் பெரிய பாகுபலி சிலை வரும் காட்சி பட வெளியீட்டுக்கு 12 நாட்கள் முன்பு சேர்க்கப்பட்டது. ஆனால் இந்த காட்சி படத்தில் இருப்பது, ராணாவுக்கு தெரியாது. படத்தில் பார்த்துவிட்டு எனக்கு பிடிக்கவில்லை என்றான். அதை நான் ஒரு வழியாக சமாளித்தேன்" என்றார்.
ரிலீஸ் சமயத்தில் ராஜமௌலி செய்த கலாட்டாக்கள் பற்றி சொன்ன ராணா "படத்தின் புரமோஷன்களுக்காக சென்றிருந்த சமயத்தில், ராஜமௌலி திடீரென வந்து `கரண் ஜோஹரிடம் பேசு, நம் பட ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம்' என சொன்னார். நான் சார் அப்படியெல்லாம் செய்ய முடியாது, அடுத்த வாரம் சல்மான் கான் (பஜ்ரங்கி பாய்ஜான்) படம் வருகிறது. வாய்ப்பே இல்லை என்றேன். பிறகு டிவிஸ்ட் என்ன என்றால், மீண்டும் இவரிடம் தள்ளி வைத்து விடலாமா எனக் கேட்டால், வந்து வேண்டாம் வேண்டாம், அது ரொம்ப நல்ல படம். அந்தக் கதை (அப்படத்திற்கு ராஜமௌலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் தான் கதை ) எனக்கு தெரியும் என்கிறார்" என்றார்.
முதல் பாகம் வெளியாகும் முன்பு பிரபாஸ் உடன் பேசிய விஷயத்தை பகிர்ந்த ராஜமௌலி "நாம் என்ன சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறோம் என உனக்கு புரிகிறதா? என்ற கேள்வியை பலமுறை பிரபாஸ் என்னிடம் கேட்டிருக்கிறார். அதிலும் பாகுபலி ரிலீசுக்கு சில நாட்கள் முன்பு நான் பிரபாஸிடம் `டார்லிங், பாகுபலி ரிலீசுக்கு பின், பார்ட் 2 ஆரம்பிக்க எப்படியும் 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிடும். இந்தப் படத்தையும் 2 மாதங்கள் முன்பே முடித்துவிட்டோம். ஒரு 8 மாத கேப் இருக்கிறது. நீ இடையில் வேறு படம் செய்வதென்றால் முடித்துவிட்டு வா' என்றேன். உடனே அவர் என்னிடம், `வேறொரு படமா? பாகுபலி 1 - பாகுபலி 2வுக்கு இடையிலா? நாம் என்ன சினிமா எடுத்துக் கொண்டிருக்கிறோம் என உனக்கு புரிகிறதா? ஒரு பிரச்சனையும் இல்லை நான் சந்தோஷமாக காத்திருப்பேன். இந்தப் படத்தை முடித்து தான் அடுத்த படம் என சொன்னார்' என்றார்.
முதன் முறை இந்த இரு பாகங்களையும் இணைக்கும் முயற்சி நடந்தது பற்றி கூறிய ராஜமௌலி "ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த இரண்டு கதைகளையும் இணைத்தால் எப்படி இருக்கும் என ஒரு முயற்சி செய்தோம், அதுவும் ஒரு நேர்கோட்டு கதையாக. அமரேந்திர பாகுபலி பிறந்ததில் இருந்து துவங்கி நகரும் படி இருந்தது. ஆனால் அது நன்றாக இல்லை என கைவிட்டோம். பின்பு காட்சிகளை குறைக்கலாம் என முயற்சித்தோம். அதுவும் கை கொடுக்கவில்லை. பின்பு மீண்டும் இந்தக் கதையை மனதில் வைத்து அதற்கேற்ப எடிட் செய்து உருவாக்கினோம்" என்றார்.
Baahubali: The Epic என்ன இருக்கிறது என்ன இல்லை என விளக்கிய ராஜமௌலி "பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து, ரோலிங் கிரெட்டிட்ஸ் இல்லாமல் 5 மணிநேரம் 27 நிமிடங்கள். அதிலிருந்து ட்ரிம் செய்து 3 மணிநேரம் 42 நிமிடங்களாக குறைத்திருக்கிறேன். படம் 4 மணிநேரமாக இருந்த போது ஒரு சிறப்பு காட்சியை திரையிட்டோம். அப்போது பாகுபலி பார்க்காதவர்கள் யாராவது இருக்கிறீர்களா எனக் கேட்டேன். யாருமே இல்லை. படம் பார்த்தவர்களின் கருத்துக்களை கேட்ட பின் அதிலிருந்து 25 நிமிடங்களை குறைத்தோம். முக்கியமாக நீக்கியது என்றால், அவந்திகாவின் காதல் காட்சிகள், Pacha Bottesi (பச்சை தீ நீயடா), Kannaa Nidurinchara (கண்ணா நீ தூங்கடா), Irukkupo (மனோகரி) போர்க்கள காட்சிகளில் சில என பார்த்து பார்த்து நீக்கி இருக்கிறேன். கதையின் தொடர்பை மட்டுமே வைத்து காட்சிகளை அடுக்கி இருக்கிறேன். கதையில் இருந்து விலகும் எந்தக் காட்சியும் இருக்காது" எனக் கூறினார்.
முதல் பாகத்துக்கான க்ளைமாக்ஸ் எப்படி உருவானது எனக் கூறிய ராஜமௌலி "காளகேயருடன் போரில் வென்றதும், பாகுபலியை அரசனாக ராஜமாதா அறிவிப்பார் அதோடு முதல் பாகம் முடிவதாக வைத்திருந்தோம். ஆனால் சுதீப், சத்யராஜ் சந்திப்பின் போது உன்னைவிட பெரிய வீரன் உண்டா எனக் கேட்பார். இதையே பிரம்மிக்கிறாய், பாகுபலியை பார்த்தால் என்ன ஆவாய் என சத்யராஜ் சொல்வார். உன்னை விட பெரிய வீரனா? என்பார் சுதீப். இப்போது அவர் உயிரோடு இல்லை நான் கொன்றுவிட்டேன் எனக் கூறுவார் சத்யராஜ். ஆனால் அந்தக் காட்சியை பார்த்த அண்ணன், இதை க்ளைமாக்ஸ் காட்சியாக வை என்றார். அப்படித்தான் அந்த க்ளைமாக்ஸ் உருவானது" என்றார்.
பாகுபலி வெளியான நாள் அன்று நெகட்டிவ் ரிவ்யூ வந்தது பற்றி கூறிய ராஜமௌலி "படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கும் என 10 சதவீதம் பயம் இருந்தது. பத்து வருடங்கள் முன் PRO மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கும் ஒரு வாட்ஸ் ஆப் குரூப் இருந்தது. அதில் என் மனைவியும் இருந்தார். படத்தின் ரிலீஸ் நாளன்று அதில் பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கி வரும் போட்டோவில், லிங்கத்துக்கு பதில் ஜண்டு பாம் வைத்து பதிவிட்டார்கள். இது பாகுபலி இல்லை, புரொடியூசர் பலி, டிஸ்ட்ரிப்பியூட்டர் பலி என அனுப்புகிறார்கள். ஆனால் அவர் யாருக்கு சொல்லாமல், அவர் மட்டுமே பார்த்திருக்கிறார். வெள்ளிக்கிழமைக்கு பிறகு படத்தின் பெரிய வெற்றி உணர்ந்த பின்புதான் கூறினார்" என்றார்.
பாகுபலி 2 இந்தி பிரீமியர் அன்று ஷோ கேன்சல் ஆனது பற்றி கூறும் போது "இரண்டாவது பாகத்துக்கு இந்தியில் பெரிய பிரீமியர் ஏற்பாடு செய்திருந்தார் கரண் ஜோஹர். மொத்த பாலிவுட்டுக்கும் அழைப்பு. அன்று வினோத் கண்ணா இறந்துவிட்டார். அந்த சூழலில் பிரீமியர் நடப்பது சரியாக இருக்காது என கேன்சல் செய்துவிட்டோம். அந்த அரங்குகளில் வேறு படம் எதுவும் போடவில்லை. சரி ஏற்பாடு செய்தது செய்துவிட்டார்கள் நாமாவது பார்ப்போம் என அங்கு காலி தியேட்டரில் அமர்ந்து பார்த்தோம். ஏற்கெனவே உடல் களைப்பில் இருந்தேன். அந்த ஏசி காற்றுக்கு படம் துவங்கியதும் எனக்கு தூக்கம் வந்துவிட்டது" என்றார் ராஜமௌலி.
பாகுபலி உலகில் அடுத்து உருவாகும் படத்தைப் பற்றி கூறிய ராஜமௌலி "Baahubali: The Epic பதிப்பில் கூடுதல் காட்சிகள் இருக்கும் என பலர் பேசுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை. ஆனால், ஷிவுடு மகிஷ்மதிக்கு வரும் இடத்தில் மட்டும் மாற்றம் செய்திருக்கிறோம். மேலும் பாகுபலி 3 டீசர் வருகிறது என்ற புரளி இருக்கிறது. ஆனால் அது Baahubali the eternal war டீசர் மட்டுமே. அது பாகுபலி 3 இல்லை, ஆனால் பாகுபலி உலகத்தின் தொடர்ச்சி மட்டுமே. அது ஒரு 3டி அனிமேஷன் படமாக உருவாகிறது. இஷான் ஷுக்லா உருவாக்குகிறார். அதன் கதையையும் என்னிடம் கூறினார், பாகுபலி உலகத்துக்குளே எதிர்பாராத திருப்பங்கள், புது கதாபாத்திரங்கள் என மிக நன்றாக இருந்தது. அது 2 வருடங்களாக உருவாகி வருகிறது. 120 கோடி செலவில் இதனை உருவாக்கி வருகிறார் தயாரிப்பாளர் ஷோபு. இதனுடைய டீசரை பாகுபலி தி எபிக் இடைவேளையில் போடப்போகிறோம்" எனத் தெரிவித்தார்.

