கரூர் துயரம் | வேகமெடுக்கிறதா விசாரணை.. களத்தில் இருந்து அஸ்ரா கார்க் பேட்டி!
கரூரில் நடந்த விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. SIT குழு அதிகாரிகளாக, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்.பி விமலா ஐபிஎஸ், CSCID எஸ்.பி சியாமளாதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழலில் அக்குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் தடயவியல் துறை அதிகாரிகள், மூன்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மொத்தமாக 8 பேர் குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 27 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்காக கரூர் சென்ற போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறையினர், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவம் காரணமாக கரூர் நகர போலீசார் வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் நேற்று சென்னை வந்து ஒப்படைத்தனர். 41 நபர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்ட SIT அதிகாரிகள் இன்று விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
இன்று காலை கரூர் சென்ற SIT குழு முதற்கட்டமாக சம்பவ இடத்திலிருந்து விசாரணையை துவங்கியது. த.வெ.க நிர்வாகிகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கிய காவல்துறையினர், பாதிக்கபட்ட மக்கள் என தனித்தனியாக சம்மன் அளித்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில் களத்தில் இருந்து செய்தியாளர்களைச் சந்தித்த அஸ்ரா கார்க், “உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றுதான் நாங்கள் விசாரணையை தொடங்கியிருக்கிறோம். விசாரணை இப்போதுதான் தொடங்கப்பட்டிருக்கிறது என்பதால் அதுதொடர்பான விபரங்கள் எதையும் வெளிப்படுத்த இயலாது. எங்கள் குழுவில் என்னைத் தவிர 2 எஸ்பிக்கள் இருக்கிறார்கள். கூடுதல் எஸ்பி ஒருவர் இருக்கிறார். டிஎஸ்பிக்கள் இருக்கிறார்கள். 5 இன்ஸ்பெக்டர்கள் இருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.