இந்திய போக்குவரத்தில் புதிய புரட்சி: மாறி நிற்கும் நவி மும்பை மற்றும் நொய்டா விமான நிலையங்கள்!
நவி மும்பை மற்றும் நொய்டா விமான நிலையங்கள், இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த உள்ளன.
கடந்த 15 ஆண்டுகளில் இந்திய விமான சேவை நிறுவனங்கள் மிகச்சிறந்த வளர்ச்சி கண்டுள்ளன. 2024 ஆம் ஆண்டில் நடந்த சர்வதேச விமானப் பயணங்களில், 46 விழுக்காடு பயணங்கள், இந்தியாவில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2007-08ஆம் ஆண்டில் 381 விமானங்கள் இருந்த இந்திய நிறுவனங்களிடம், 2024ஆம் ஆண்டுக்குள் 800 விமானங்கள் உள்ளன. உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை, 4.4 கோடியில் இருந்து 16.1 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச பயணிகள் எண்ணிக்கை 2.7 கோடியில் இருந்து 7.2 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய விமான சேவை நிறுவனங்கள், 800க்கும் அதிகமான விமானங்களை வாங்கியுள்ளதால், அவற்றை இயக்க புதிய ஏர்போர்ட்கள் அவசியமாக உள்ளன. அந்த நோக்கத்தில் தான் நவி மும்பை, நொய்டா விமான நிலையங்கள் தயாராகியுள்ளன. நவி மும்பை விமான நிலையம், வரும் எட்டாம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையம், மும்பையில் தற்போது செயல்படும் சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்துடன் இணைந்து இயங்கும். சர்வதேச விமான சேவைகளை அதிக அளவில் வழங்கும். அந்த வகையில், 2030களில் மும்பையின் முக்கியமான மற்றும் மிகப்பெரிய விமான நிலையமாக, நவி மும்பை விமான நிலையம் உருப்பெறும்.
இதேபோல, நொய்டா விமான நிலையம், ஆசியாவிலேயே மிகப்பெரிய தள பரப்புடன் உருவாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக அமைந்துள்ளது. இந்த மாத இறுதியில் திறக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் 1.2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டிருக்கிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு, 7 கோடி பயணிகளை கையாளும் திறனுடன் விளங்கும்.
நொய்டா மற்றும் நவி மும்பை விமான நிலையங்கள், துபாய் மற்றும் லண்டனின் ஹீத்ரோ போல, டெல்லியையும் மும்பையையும் சர்வதேச தரம் கொண்ட விமான மையங்களாக மாற்றும். இந்தியாவின் விமானப் போக்குவரத்து வளர்ச்சியை மேம்படுத்தும்.