கரூர் துயரம் : விசாரணையை தொடங்கிய அஸ்ரா கார்க் குழு
கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு கரூர் செல்கிறது. பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவும், சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. வழக்கின் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினர் கரூர் செல்கின்றனர்.
கரூரில் நடந்த விஜய் பரப்புரையில் 41 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. SIT குழு அதிகாரிகளாக, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்.பி விமலா ஐபிஎஸ், CSCID எஸ்.பி சியாமளாதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இத்தகைய சூழலில் அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவில் மேலும் 8 அதிகாரிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தடயவியல் துறை அதிகாரிகள், மூன்று காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் என மொத்தமாக 8 பேர் குழுவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கடந்த 27 ஆம் தேதி த.வெ.க தலைவர் விஜய் பரப்புரைக்காக கரூர் சென்ற போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக கரூர் நகர காவல்துறையினர், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
105 BNS – கொலையாகாத மரணம்.
110 BNS – பிறருக்கு மரணம் விளைவிக்கும் செயல் செய்தல்.
125 BNS – மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் செய்தல்
223 BNS – பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமை.
TNPPDL (3) - பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்.
ஆகிய ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக A1 கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், A2 த.வெ.க பொதுச் செயலாளர் N.ஆனந்த், A3 த.வெ.க இணை பொதுச் செயலாளர் CT நிர்மல் குமார் உள்ளிட்ட மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், நாமக்கல் எஸ்.பி விமலா ஐபிஎஸ், CSCID (Civil Supply.CID) எஸ்.பி சியமளாதேவி கொண்ட குழுவை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்படடது.
இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவம் காரணமாக கரூர் நகர போலீசார் வழக்கு ஆவணங்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகளிடம் நேற்று சென்னை வந்து ஒப்படைத்தனர். 41 நபர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்ட SIT அதிகாரிகள் இன்று விசாரணையைத் துவங்கியுள்ளனர்.
இன்று காலை SIT குழுவானது கரூர் சென்றுள்ளது. முதற்கட்டமாக சம்பவ இடத்திலிருந்து விசாரணையை துவங்கவுள்ளது. அதன்பின்பாக த.வெ.க நிர்வாகிகள், பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கிய காவல்துறையினர், பாதிக்கபட்ட மக்கள் என தனித்தனியாக சம்மன் அளித்து விசாரிக்க திட்டமிட்டிருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, விஜயின் பரப்புரை பேருந்து விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக HIT and RUN வழக்கில் பேருந்தை உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்ததன் அடிப்படையில் கரூர் வேலாயுதம்பாளையம் போலீசார் விஜயின் பரப்புரை வாகன ஓட்டுநர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.