கரூர் துயரச்சம்பவம் |”காவல்துறை முழுமையான பாதுகாப்பை வழங்கவில்லை..” - எடப்பாடி பழனிசாமி
கரூரில் நேற்று மாலை தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, இந்தப் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரிடியாக சென்று பார்ப்பதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை கரூருக்கு சென்றார். பின்னர், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “ தவெக பரப்புரை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் ஏற்ப்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும் ஊடகங்கள் மூலமாக தகவல் வருகிறது. அதோடு தவெக கூட்டம் அறிவிக்கப்பட்ட போதே முன்னெச்சரிக்கை எடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே 4 மாவட்டங்களில் தவெக-வினர் பரப்புரையில் ஈடுபட்டிருந்தனர். அந்த பரப்புரையில் எவ்வாறு மக்கள் கலந்து கொள்கின்றனர், என்ன நிலைமை என்பதை ஆராய்ந்து உரிய பாதுகாப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஊடகங்களில் பார்க்கின்ற போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. மேலும், முந்தைய பரப்புரைகளின் போதும் காவல்துறை உரிய பாதுகாப்பை கொடுக்கவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.
மேலும், இந்த பிரச்சனை தவெகவிற்கு மட்டுமல்லாமல், நான் அதிமுகவின் சார்பாக தமிழகம் முழுவதும் எழுச்சிப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். அந்தப் பயணத்திலும் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு என்பது அளிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில் ஆளுங்கட்சியினர் கூட்டங்களை நடத்தும்போது ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பளிக்கின்றனர். இந்த அரசாங்கம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்கிறது. இந்த விஷயங்களில் நடுநிலைமையுடன் நடந்து கொள்வது அவசியம்.
அதிமுக அரசாங்கம் இருக்கும் போது பல்லாயிரக்கணக்கான போராட்டங்கள் நடந்திருக்கின்றன, ஒவ்வொரு கூட்டங்களுக்கும் நாங்கள் உரிய பாதுகாப்பளித்தோம். ஆனால், திமுக அரசில் கூட்டம் நடத்துவது என்பதே கடினமாக இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீதிமன்றம் சென்றே அனுமதி பெறுவதாக இருக்கிறது. அப்படி நடத்தினாலும், திமுக அரசு முழுமையான பாதுகாப்பு அளிப்பதில்லை. அப்படி அளித்திருந்தால் இன்றைய உயிரிழப்புகளை தவிர்த்திருக்க முடியும். தொடர்ந்து, ஒரு கட்சித் தலைவராகவும் அதை கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர், நான்கு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்கள். அந்த பரப்புரையில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை ஆராய்ந்து செயல்படுவது அவசியம்.
ஒரு அரசியல் கட்சி கூட்டம் நடத்துகிறது என்றால் பொதுமக்கள், அந்த அரசியல் கட்சியையும், அரசாங்கத்தையும், காவல்துறையையும் நம்பித்தான் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். எனவே அரசாங்கமும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதே போல, ஒரு தலைவர் ஒருநேரத்தில் பரப்புரை நடத்துவதாக அறிவித்துவிட்டு நேரம் தவறி வரும் போது சில பிரச்சனைகள் நடக்கத்தான் செய்யும். எனவே அவரும் அதை உணர்ந்து செயல்பட வேண்டும். தொடர்ந்து, நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிலேயே இதுவரை ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. இது மிகுந்த வேதனையை தருகிறது” என்று கூறினார்.