தவெக பரப்புரையில் 39 உயிரிழப்பு.. விஜய் கைது செய்யப்படுவாரா..? முதல்வர் ஸ்டாலின் பதில்!
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இச்சம்பவத்தை பார்வையிடுவதற்கு நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் தனி விமானம் மூலம் கரூர் சென்றார். அங்கு கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேர் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர், சிகிச்சை பெற்று வரக்கூடிய நபர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், அதிகாரிகள் மற்றும் அரசு மருத்துவர்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சிவசங்கர், அன்பில் மகேஷ், ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன், செந்தில்பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப்பேசிய முதல்வர் ஸ்டாலின், “சென்னையில் அதிகாரிகளுடன் கலந்து பேசிக் கொண்டிருந்தபோது கரூரில் இப்படி ஒரு சம்பவம் கூட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு பல பேர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்கள் என செய்தி அறிந்தேன். செய்தி கிடைத்தவுடன் கரூர் பகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை தொடர்பு கொண்டு இந்த செய்தி உண்மையா என கேட்டேன், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்க்க உத்தரவிட்டேன். மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு நான் கேட்டபோது அவரும் இந்த விஷயங்களைக் கூறினார். அடுத்த ஐந்து நிமிடங்களில் நான்கு ஐந்து பேர் மருத்துவமனைக்கு வந்தது தெரிய வந்தது.
பின்னர், அதிகமான நபர்களை மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்தது. அதன் பின்பு மரண செய்திகள் வரத் தொடங்கியது கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அச்சம் ஏற்பட்டு உடனடியாக மாவட்டத்தினுடைய சுற்று வட்டத்தில் இருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்களை தொடர்பு கொண்டேன். அந்த அடிப்படையில் அன்பில் மகேஷை உடனடியாக கரூருக்கு செல்ல உத்தரவிட்டேன். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு உடனடியாக பாருங்கள் என அவரை அனுப்பி வைத்தேன். டிஜிபி, சட்ட ஒழுங்கு ஏடிஜிபி ஆகிய அதிகாரிகளை அனுப்பி போர்க்கால அடிப்படை நடவடிக்கை எடுங்கள் எனக் கூறினேன்.. வந்த செய்திகள் எல்லாம் என் மனதை கலங்கடித்தது. உடனடியாக தலைமை செயலகத்திற்கு மூத்த அமைச்சர் துணைமுருகன், நேரு, எ.வ.வேலு ஆகியோரிடம் அழைத்து வந்து தலைமைச் செயலகத்திற்கு சென்றேன், அதிகாரிகளை அழைத்து டிஜிபியை அழைத்து அவர்களுடன் கலந்து பேசி என்ன நடவடிக்கை என்பது குறித்து கேட்டேன்.
பல்வேறு மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள் 5 மாவட்டங்களில் இருக்கக்கூடிய மருத்துவர்கள் எல்லாம் உடனடியாக கரூருக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் அது தொடர்பாக அறிக்கையை வெளியிட்டுள்ளேன். பெரும் துயர சம்பவத்தில் மொத்தம் 39 உயிர்கள் இதுவரை நாம் இழந்திருக்கிறோம். ஆண்கள் 13 பேர், பெண்கள் 16 பேர் ஆண் குழந்தை 5, பெண் குழந்தைகள் 5 பேர், அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழந்த சம்பவம் என்பது இதுவரை நடக்காதது, இனிமேல் நடக்கக் கூடாது.
மேலும், 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் 26 பேர் ஆண்கள், 25 பெண்கள். இவர்கள் எல்லோரும் விரைவில் நலமடைந்து குணமடைந்து மீண்டு வர வேண்டும் என நம்புகிறேன். இறந்து போன உயிர்களுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்துகிறேன் அவர்கள் குடும்பத்திற்கு என்ன ஆறுதல் சொல்லி தேற்றுவது என தெரியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறேன்.
இந்த துயரமான சம்பவத்தில் மரணமடைந்த குடும்பத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அறிவித்திருக்கிறேன். காயமடைந்து சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளேன். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் ஆணையத்தை அமைக்க உத்தரவிட்டிருக்கிறேன்.
காலை 9:30 மணிக்கு வரலாம் என நினைத்தேன். கொடூர காட்சிகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது மனசு கேட்கவில்லை வீட்டில் இருக்க முடியவில்லை இரவோடு இரவாக வர வேண்டும் என திட்டமிட்டு ஒரு மணி அளவில் விமானத்தை பிடித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். மரணம் அடைந்து இருக்கக்கூடிய அந்த குடும்பத்திற்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, விஜய் கைது செய்யப்படுவாரா? என்பது குறித்தான கேள்விக்கு, அரசியல் நோக்கத்தோடு பேச நான் தயாராக இல்லை. விசாரணை ஆணையம் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்றார். பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாகவும் ஏற்கனவே கேட்ட இடத்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.