கரூர் கூட்டநெரிசல் குறித்து டிஜிபி விளக்கம்
கரூர் கூட்டநெரிசல் குறித்து டிஜிபி விளக்கம்pt

”10,000 பேர் வருவார்கள் என சொன்னார்கள்.. ஆனால் 27,000 பேர் கூடினார்கள்” - டிஜிபி விளக்கம்

கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரை கூட்டநெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்டநெரிசலில் சிக்கி பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது.

TVK Vijay
TVK Vijaypt web

இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 39 பேர் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 51 பேர் சிகிச்சையில் இருந்துவரும் நிலையில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்
கரூர் கூட்ட நெரிசல்

இந்தசூழலில் இரவே கரூருக்கு புறப்பட்டுச்சென்ற முதல்வர் முக ஸ்டாலின் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்பு உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் கரூர் கூட்டநெரிசல் குறித்து பொறுப்பு டிஜிபி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

27,000 பேர் கூடினார்கள்..

கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கரூரில் நடைபெற்றது மிகவும் துரதிஷ்டமான விஷயம். தற்போது வரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் ஆண்கள் 12, 16 பெண்கள், ஐந்து ஆண் குழந்தைகள் ஐந்து பெண் குழந்தைகள் என பத்து குழந்தைகள் இறந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் மூன்று ஐஜி..கள், 10 எஸ்பிக்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டுதான், ஏற்கனவே அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமாக வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் கரூரில் பெரிய இடம் ஒதுக்கப்பட்டது.

இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்பரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடியுள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.

முக்கியமாக குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால், காலை 11 மணியிலிருந்து கூட்டம் சேர்ந்தநிலையில் விஜய் இரவு 7.40க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை.

கூட்டம் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் அவர்களே காவல்துறையை பாராட்டினார். கட்சித் தொண்டர்கள் முறையாக கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நாம் முன்னரே அவர்களுக்கு நிபந்தனை விதிக்கிறோம்.

ஆனால் 27 ஆயிரம் கூட்டத்திற்கு எதிர்பார்த்து காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. இந்த துயரமான சம்பவம் எதனால் நடந்தது? என்பது குறித்து அதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அதுபற்றி தற்போது பேச முடியாது என தெரிவித்தார்.

உயிரிழப்பு சம்பவத்திற்கு காவல்துறை பொறுப்பு ஏற்குமா? தமிழக அரசு பொறுப்பு ஏற்குமா அல்லது தமிழக வெற்றிக் கழகம் பொறுப்பு ஏற்குமா? என்ற கேள்விக்கு, இப்போதைக்கு அதுகுறித்து பதிலளிக்க முடியாது என பாதியிலேயே எழுந்து சென்றார்.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்வியை கேட்டு முடிப்பதற்குள் திரும்பிப் பார்க்காமல் டிஜிபி வெங்கடராமன் பத்திரிகையாளர் அறையை விட்டு வெளியேறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com