கரூர் துயரம் | சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகும் தவெக தலைவர் விஜய்., சம்மன் விவரங்கள் வெளியானது!
2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் என். ஆனந்த் , ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் மதியழகன் உள்ளிட்டோரை டெல்லிக்கு நேரில் அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
இதேபோல், கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு பணியாளர்களிடமும் சிபிஐ விசாரணை நடத்தியது. சுமார் 19.30 மணி நேரம் சிபிஐ விசாரணை நடத்தி இருந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் எனக்கூறி முதற்கட்ட விசாரணையை டிசம்பர் 31 அன்று நண்பகலில் சிபிஐ நிறைவு செய்தது. இதனைத் தொடர்ந்து, 2-ஆம் கட்ட விசாரணைக்காக தவெக தலைவர் விஜய்க்கு கடந்த, 6-ஆம் தேதி அன்று எழுத்துப்பூர்வ சம்மனை சிபிஐ அனுப்பியது.
சம்மன் விவரம்..
தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அனுப்பிய சம்மன் தொடர்பான சில விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, 2025 டிசம்பர் 29, 30, 31 ஆகிய தேதிகளில் சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் சாட்சியத்திற்காக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைக்க பெற்றுள்ளது. குறிப்பாக, பி.என்.எஸ்.எஸ் 179 சட்ட விதிகளின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதன் பொருள் விசாரணைக்கு அழைக்கப்படுபவர்; குற்றம் செய்தவர் அல்ல. மாறாக குற்றம் நடைபெற்ற விதம் அல்லது அது தொடர்பான தகவல் குறிப்பிட்ட நபருக்கு தெரியும் என்ற கோணம் ஆகும்.
குறிப்பாக, 2025 செப்டம்பர் 27 அன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் விஜய் கலந்து கொண்ட போது இருந்த சூழல், அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த பிறகும் அவசரமாக அங்கிருந்து புறப்படுவதற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து சிபிஐ விசாரணை நடத்தி தகவல்களை கேட்டு அறியவுள்ளது. மேலும், ஜனவரி 12-அன்று காலை 11 மணிக்கு டெல்லி லோதி எஸ்டேட் சாலையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் ஆஜராக வேண்டும் என எழுத்துப் பூர்வ சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு மனு.!
கரூர் துயரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நாளை (ஜனவரி 12) தவெக தலைவர் விஜய் டெல்லி செல்லவுள்ள நிலையில், நாளை இரவு டெல்லியிலேயே தங்குகிறார். இந்நிலையில், டெல்லியில் தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி தவெக சார்பில் டெல்லி காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

