“தமிழ்நாட்டு பெண்களுக்காக நான் குரல் கொடுக்கவில்லையா?” - சௌமியா அன்புமணிக்கு கனிமொழி எம்.பி. பதில்!
செய்தியாளர்: ரமேஷ்
சென்னையில் திமுக மகளிரணி சார்பில் நடைபெறும் இளம் பெண்கள் பாசறை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.
“வெளிமாநில பிரச்னைகளுக்கு மட்டுமே குரல் கொடுத்தேனா நான்?”
அப்போது பேசிய அவரிடம், பாமக-வின் சௌமியா அன்புமணி முன்வைத்த ‘வெளிமாநில பிரச்னைகளுக்கு கனிமொழி போராட்டம் நடத்தினார், ஆனால் தமிழ்நாட்டு பிரச்னைக்கு குரல் கொடுக்கவில்லை’ என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி, “மணிப்பூர் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. பிரதமர் மோடி நேரில் சென்று என்ன என்று கூட கேட்கவில்லை.
ஆனால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு உள்ளார் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யவும்பட்டிருக்கிறார். இப்போது நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததாக இருக்கும். அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் அச்சம்பவத்துக்கு நானும் கண்டனம் பதிவு செய்தேன். செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்திருந்தேன். என்னைப் பொறுத்தவரை, இது போன்ற சம்பவம் இனியொருமுறை நடக்கக்கூடாது. நடந்த இந்த சம்பவமானது, இந்த சமூகமே வெட்கி தலைகுனியும் நிகழ்வு.
இச்சம்பவத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார். பொள்ளாச்சியில் நடந்தது போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றவாளியை பாதுகாக்கும் நிலை இல்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் போராட்டம் செய்வதில் என்ன உள்ளது?” என்றார்.
யார் அந்த சார்?
தொடர்ந்து, ‘யார் அந்த சார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவது பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கனிமொழி, “சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து கொண்டு உள்ளது. காவல் துறையினர், குற்றவாளியின் செல்போன் ஏரோபிளேன் மோடில் இருந்ததாக சொல்கிறார்கள். அந்த சார் என ஒருவர் இருக்கிறாரா இல்லையா என்று விசாரணையில்தான் தெரியும்.
அண்ணா பல்கலைக்கழக வழக்கை அரசியலாக்கதான் எதிர்கட்சிகள் பார்க்கிறார்கள். முதல் தகவல் அறிக்கை வெளியானதுக்கு காரணம் திமுக அரசு கிடையாது. இணையதள பிழை என்று சம்பந்தப்பட்டவர்களே சொல்லியிருக்கிறார்கள். அப்படியிருக்கையில் அதை தமிழக அரசின் மீது குற்றச்சாட்டாக மாற்றுவது நிச்சயம் அரசியலாக மாற்றும் செயல்தான்” என்றார்.
ஆட்டை மந்தையுடன் பாஜக-வினர் அடைக்கப்பட்ட விவகாரம்:
தொடர்ந்து, ‘பாஜக மகளிர் அணி போராட்டத்தின் போது குஷ்பு உள்ளிட்டவர்களை ஆட்டு மந்தைகள் அடைக்கும் இடத்தில் அடைத்து வைத்ததாக எழுந்த புகார் தொடர்பான கேள்விக்கு,
“ஆடுகளை அடைக்கும் இடத்தில் ஆடுகளை விட்டுவிட்டு ஏன் மனிதர்களை அடைக்கப் போகிறார்கள்? எங்கு அவர்களை அடைத்து வைக்க வேண்டும் என்பது அவர்கள் முடிவு... அதில் நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் அங்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள்” எனக்கூறினார்.