அண்ணா பல்கலை. விவகாரம்: “பெண்களுக்கு எப்படி மரியாதை தரவேண்டும் என சமுதாயம் கற்கவேண்டும்”- நீதிமன்றம்
செய்தியாளர்: V M சுப்பையா
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் சரமாரி கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமாக இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரங்களை காணலாம்...
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை காவல்துறையினர் வெளியிட்டது சட்டவிரோதம். முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டதை காவல் ஆணையரை ஒப்புக்கொண்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபர் மீது 20 வழக்குகள் உள்ளதாக காவல் ஆணையரே சுட்டிக்காட்டியுள்ளார். அவர் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும்.
பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவையும் மீறி முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இடைக்காலமாக இந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
மேலும், “கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக இந்த ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமே உள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். ஆனால் பல வழக்குகள் உள்ளன. அவற்றையும் விசாரிக்க வேண்டும்” என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “புலன் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கைதானவர் குற்றவாளிதான் என்று காவல் ஆணையர் எப்படி முடிவுக்கு வந்தார்? கைது செய்யப்பட்டவர் காலில் பேண்டேஜ் ஏன் போடப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பதில் அளித்த போது, “பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றுதான் காவல் ஆணையர் கூறியுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட நபரை விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது அவர் தப்பி ஓட முயற்சித்ததார். அவரை காவல்துறையினர் விரட்டிச் சென்றபோது தவறி விழுந்து காயம் ஏற்பட்டது” என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, “அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் முன் அரசு அனுமதி பெற வேண்டுமா? முதல் தகவல் அறிக்கை வெளியானது ஏன்? அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், “மாணவிகள் பாதுகாப்புக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? நிர்பயா நிதி செலவு செய்யப்பட்ட விபரங்கள் குறித்தும் அறிக்கை அளிக்க வேண்டும். பல்கலைக்கழக விசாகா குழுவில் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்பது குறித்தும் அறிக்கை அளிக்கவேண்டும்” என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டனர்.
தொடர்ந்து “பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக புகார் அளிக்க முன்வந்ததற்கு பாராட்டுகள். அவரை பாதுகாக்க வேண்டியது நம் கடமை. குற்றவாளி 10 ஆண்டுகள் அண்ணா பல்கலை வளாகத்தில் உலாவி வருகிறார். அதை விசாரித்தீர்களா?
பெண்கள் ஆண்களுடன் பேச கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அங்கு சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் பேசக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. காதல் என்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்” என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து வழக்கின் விசாரணையை இன்று காலைக்கு தள்ளிவைத்தனர்.
இன்று விசாரணைக்கு வந்தபோது...
இன்று விசாரணைக்கு வந்தபோது, “ஒரு குற்றம் நடைபெற்றால் அதில் பெண்தான் குற்றம் சாட்டப்படுகிறார்; ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை உருவாக வேண்டும். பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். பெண்கள் மீது குற்றம் சாட்டப்படுவது குற்றவாளிக்கு சாதகமாகிவிடும்.
தனிப்பட்ட முறையில் ஆணும் பெண்ணும் பேசுவதில் தவறொன்றும் இல்லை. அது அவர்களுக்கான உரிமை; அதில் யாரும் தலையிட முடியாது. ஆண் என்பதற்காக, பெண்களை அவர்களின் அனுமதி இல்லாமல் தொட உரிமை இல்லை; பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை இந்த சமுதாயம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் (அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா) அடங்கிய குழு அமைத்து நீதிமன்றம் ஆணைபிறப்பித்தது. மேலும், “மாணவியின் அடையாளத்தை FIRஇல் குறிப்பிட்டது சட்டப்படி தவறு; பாதிக்கப்பட்ட மாணவியின் கண்ணியம் காக்கப்படவில்லை சென்னை காவல் ஆணையர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.