மதுரை | போராட்டத்துக்குப் பின் ஆட்டுமந்தை அருகே அடைக்கப்பட்ட பாஜக-வினர்... என்ன நடந்தது?
செய்தியாளர்: மணிகண்டபிரபு
தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், “மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லத்தம்மன் கோவில் முன்பாக, ‘அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டம்’ நடக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், “இந்தப் போராட்டமானது மதுரையில் தொடங்கி, திண்டுக்கல் - திருச்சி - விருத்தாச்சலம் - விழுப்புரம் வழியாக சென்னைக்கு சென்றடையும். அங்கு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்” என பாஜக-வினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே மதுரை செல்லத்தம்மன் கோவில் முன் இப்பேரணியை தொடங்க, காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் தடையை மீறி இன்று பேரணி நடத்துவதாக கூறிய பாஜகவினர், அறிவித்தபடியே இன்று செல்லத்தம்மன் கோவில் முன்பாக திரண்டு நின்று திமுக அரசை கண்டித்தும் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி குஷ்பு உட்பட மகளிரணி நிர்வாகிகளை கைது செய்து சிம்மக்கல் பகுதியில் உள்ள பல்வேறு மண்டபங்களில் காவல்துறையினர் அடைத்து வைத்தனர்.
இதில் குஷ்பு, மகளிரணி தலைவர் உமா ரதி உள்ளிட்ட மகளிரணியினர் மதுரை சிம்மக்கல் ஓர்க்ஷாப் ரோடு பகுதியில் உள்ள ஆயிரம்வீட்டு யாதவர் ஆட்டுமந்தை திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அப்போது அவர்கள் “இங்கே பக்கத்திலுள்ள ஆட்டுமந்தையில் ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில்தான் எங்களை அடைத்து வைத்துள்ளனர் என்றாலும், மந்தையிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதோடு ஆடுகள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கின்றன. இவையாவும் எங்களுக்கு தொந்தரவாக உள்ளது. எங்களுடைய போராட்டத்தை இழிவுபடுத்த வேண்டும் என காவல்துறை இதுபோன்று செய்கிறது” எனக் கூறி காவல்துறையினருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி மண்டபத்திற்குள்ளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காவல்துறையினருக்கும் பாஜக மகளிரணி நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆட்டு மந்தையில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அடைத்து வைத்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் சில பாஜக நிர்வாகிகளையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையே குஷ்பு உள்ளிட்ட நிர்வாகிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு அருகிலிருந்த மந்தைக்கு, கூடுதலாக 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் அழைத்துவரப்பட்டு அடைக்கப்பட்டன. இதனால் மண்டபத்தின் முன்பாக கூடியிருந்த பாஜகவினருக்கும், ஆட்டுமந்தையில் உள்ளவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிம்மக்கல் பகுதியில் உள்ள ஓர்க்ஷாப் சாலை முழுவதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட நீதி கேட்கும் பேரணியின்போது குஷ்பு தடுமாறி கீழே விழுந்தது, ஆடுகள் அடைத்து வைக்கப்பட்ட மண்டபத்தில் குஷ்பு மற்றும் பாஜக மகளிர் அணியினரை அடைத்து வைத்தது ஆகிய நிகழ்வுகள் அடுத்தடுத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.