’அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல’... காமராஜரின் பிறந்தநாளுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
ஏழ்மையான வாழ்க்கை, அரசியல் ஞானம், மக்கள் பணியில் ஈடுபாடு என தனது வாழ்நாள் காலத்தையே பொது நலக்குகாக அர்பணித்தவர்தான் கல்வி தந்தை காமராஜர்.
கல்வி சிறந்த தமிழ்நாடு என்ற பாரதியின் வார்த்தைகளை மெய்பிக்க அல்லும் பகலும் அயராது உழைத்த தலைவர் காமராஜர்.
பள்ளிக்கூடத்தை கட்டினாலும் பிள்ளைகள் சரியாக சேரவில்லை. ஒரு முறை ஒரு தாயிடம் "பிள்ளையை ஏன் பள்ளிக்கு அனுப்பவில்லை" என்று கேட்டார் காமராஜர். அதற்கு அந்த தாய் "என் பிள்ளை படித்து தாசில்தாரா ஆக போகிறான்?" என்று கேட்டார். உடனே காமராஜர் "உன் பிள்ளையை படிக்க வை. நான் தாசில்தார் ஆக்குகிறேன்" என்றார்.
கல்விப் பணிகள் அல்லாது தொழில் வளர்ச்சியிலும், பாசன வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் காமராஜருக்கு இணை யாரும் கிடையாது. இலவச கல்வி, இலவச மதிய உணவு, இலவச பாடப்புத்தகம் எல்லாவற்றுக்கும் முன்னோடி காமராஜரே. ஒவ்வொருவரும் இப்போது படித்த மேதை ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அது இப்படிக்காத மேதையால்தான்.
”சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவோ ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை” என்றுரைத்து, தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று. இவருக்கு பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிதம்பரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ” அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” என்று தெரிவித்துள்ளார் .