”விஜய்க்கு 6 மாதம் அவகாசம்” - தவெக ஆட்சி குறித்து கமல்ஹாசன்
2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியிருந்தார். அப்போது திமுக-அதிமுக கூட்டணி வைத்து ஆட்சிப்பிடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ரஜினிதான் காரணம் என்றும், விஜயை பார்த்து ரஜினி பொறாமைப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வந்தன. இந்தச் சூழலில்தான், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்த நடிகர் ரஜினிகாந்த், ”விஜய் தேர்தலில் வெற்றி பெற்றது எனக்கு பொறாமை கிடையாது, ஆச்சரியம் கலந்த சந்தோஷம் மட்டுமே” எனக் கூறியதுடன், ”ஒருவேளை கமல்ஹாசன் முதல்வராக வந்திருந்தால்கூட பொறாமைப்பட்டிருப்பேன்” என சிரித்துக் கொண்டே கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் ’சேயோன்’ பட தொடக்க விழாவிற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த மநீம தலைவரும் ராஜ்ய சபா எம்.பியுமான கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் ரஜினி பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்து பேசிய அவர், ” ‘என்னைப் பார்த்து பொறாமைபட்டிருப்பேன்’ என ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டேதான் கூறினார். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து பொறாமைபட்டது கிடையாது. இருவருக்குள்ளும் போட்டி மட்டுமே” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, விஜய் தலைமையிலான தமிழக அரசு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ”இரண்டு நாளில் சொல்லக்கூடியது ஜோதிடமாகத்தான் இருக்க முடியும். 6 நாளில் சொல்லக்கூடியதும் அவ்வாறே இருக்கும். புதியவர்கள் வந்திருக்கிறார்கள், அவருக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
சுதந்திர இந்தியா கிடைத்தபோது, எல்லாருமே புதிய அமைச்சர்கள்தான், அதனால் புதியவர்களை நாம் குறைவாக எடை போட வேண்டாம். அதிகமாகவும் எதிர்பார்க்கக்கூடாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

