”நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன்..” - ரஜினிகாந்த்
2026 தேர்தல் தோல்விக்குப் பிறகு ஸ்டாலினை சந்தித்தது குறித்து ரஜினிகாந்த் விளக்கம் அளித்தார். விஜய்மீது பொறாமை இல்லை, அவர் முதல்வராக வருவதையும் தடுத்ததில்லை என்றார். ரசிகர்கள் விரும்பிய கட்சிக்கு ஆதரவு தரலாம் என கூறிய ரஜினி, நான் அரசியலுக்கு வந்திருந்தால் 100% வெற்றி பெற்றிருப்பேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து பேசியிருந்தார். அப்போது திமுக-அதிமுக கூட்டணி வைத்து ஆட்சிப்பிடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அதற்கு ரஜினி தான் காரணம் என்றும், விஜயை பார்த்து ரஜினி பொறாமை படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்தது.
இந்தசூழலில் இன்று செய்தியாளர்களை கூட்டி ஸ்டாலினை சந்தித்தது ஏன் என விளக்கம் கொடுத்த ரஜினி, விஜய் மேல் எனக்கு என்ன பொறாமை, அப்படி செய்யும் தரங்கெட்ட நபர் இந்த ரஜினிகாந்த் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
அப்போது உங்கள் ரசிகர்கள் நீங்க கட்சி ஆரம்பித்திருந்தால் சிஎம் ஆகியிருக்கலாம், கால சூழலில் அது நடக்காமல் போய்விட்டது என வருத்தப்படுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்தார். அதில், நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். அது தெரிஞ்சபிறகும் அவர்கள் சொல்கிறார்கள் என்றால், அவர்களுக்குள் ஆதங்கம் இருக்கிறது. ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த எந்த கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்களோ அதற்கே ஆதரவாக இருங்கள் என்று நான் கூறிவிட்டேன் என்று கூறினார்.
முதல்முறை முதலமைச்சாராக பதவியேற்றிருக்கும் விஜய்க்கு உங்களுடைய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு “மக்களுக்கு நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருக்கு, அதை அவர் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதலில் ஒரு 2 வருடத்திற்கு அவரை விட்டுவிட வேண்டும். இன்னொன்று அவருடைய தொண்டர்கள், ரசிகர்கள் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும், அவர்கள் செய்யும் தவறும் நேராக விஜய் அவர்களை பாதிக்கும். . சம்பிரதாயத்திற்கு சென்று முதலமைச்சரை சந்திப்பில் எனக்கு உடன்பாடில்லை என்று கூறினார்.
மேலும் திராவிட கட்சிகள் ஓரங்கட்டப்பட்டது குறித்த கேள்விக்கு, “60 ஆண்டு திராவிட ஆட்சிக்கு பிறகு ஒரு மாற்றமாக விஜய் வந்திருக்கிறார், அவருக்கு சினிமா புகழ், இளைஞர்கள், பெண்கள், சோஷியல் மீடியா அனைத்தும் கைக்கொடுத்திருக்கிறது” என்றார்.
நீங்கள் கட்சி ஆரம்பித்திருந்தால் வெற்றிபெற்றிருப்பீர்களா? என்ற கேள்விக்கு, “100% வெற்றிபெற்றிருப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
