ஜிஎஸ்டி மாற்றம்.. 40% உயர்த்தப்பட்ட வரி.. பிரதமர் பெருமிதம்.. ப.சிதம்பரம் விமர்சனம்!
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சொந்த பயன்பாட்டுக்கான தனியார் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு படகுகளுக்கான வரிவிதிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரிவிகிதங்களில் மாற்றம் செய்த மத்திய அரசு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில், ’தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்படும்’ என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) 5, 12, 18, 28 என 4 அடுக்குகளாக வரி அமல்படுத்தப்பட்டது. இதை 5 மற்றும் 18 சதவீதம் என 2 அடுக்குகளாக மாற்ற மத்திய அரசு பரிந்துரைத்தது. இந்த மாற்றத்தின்படி, 12 மற்றும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி வரிவிதிங்கள் கைவிடப்பட்டு, 5 மற்றும் 18 விழுக்காடு வரி விகிதங்கள் மட்டுமே இனி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதேவேளையில், சில பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத சிறப்பு ஜி.எஸ்.டி வரி விதிப்பும் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, UHT பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கும், இனி ஜி.எஸ்.டி வரி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகள், நவராத்தி பண்டிகையின் முதல்நாளான செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
சொகுசு படகுகளுக்கான வரிவிதிப்பு 40 சதவீதமாக உயர்வு
இதற்கிடையே நேற்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சொந்த பயன்பாட்டுக்கான தனியார் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் சொகுசு படகுகளுக்கான வரிவிதிப்பு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏற்கெனவே 28 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் விமானங்களின் ஜிஎஸ்டி கட்டணம் 16 கோடி ரூபாயில் இருந்து 550 கோடி ரூபாய் வரை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட் கட்டணத்திற்கான ஜிஎஸ்டி 12இல் இருந்து 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரிகள் உயர்த்தப்பட்டுள்ள அதேவேளையில், ட்ரோன் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக ட்ரோன்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை
மறுபுறம், காகிதத்தின் மீதான ஜிஎஸ்டி வரியை 18 விழுக்காடாக உயர்த்தியிருப்பது, காலண்டர், டைரி உள்ளிட்ட பொருட்கள் 6 விழுக்காடு விலை உயர்வை சந்திக்க வழிவகுத்துள்ளதாக தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’12 விழுக்காடு வரி அடுக்கில் இருந்த காகிதம், 5 விழுக்காட்டிற்கு குறைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், 18 விழுக்காடு வரி அடுக்கிற்கு உயர்த்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, நாட்காட்டி, மாதக்காட்டி, டைரிகள் உட்பட, காகிதகத்தால் உருவாக்கம் பெறும் பல்வேறு பொருட்கள், வழக்கத்தைவிட 6 விழுக்காடு விலை உயர்வை சந்திக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு காகிதத்தை மூலப்பொருளாகக் கொண்டு இயங்கும் சிறு, குறு நிறுவனங்களை பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு அரசு பரிசீலிக்க வேண்டுமென’ தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி பெருமிதம்.. ப.சிதம்பரம் விமர்சனம்
ஜிஎஸ்டி வரிவிகிதம் மாற்றம் தொடர்பாக பிரதமர் மோடி, 'தீபாவளி, சாத் பூஜை பண்டிகைக்காக மத்திய அரசு இரட்டைப் பரிசை அறிவித்துள்ளதாக பெருமிதம்' தெரிவித்துள்ளார். டெல்லியில் தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து பேசினார். அப்போது, ’21-ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி சீர்திருத்தம் உதவிகரமாக இருக்கும்’ என்றார். மேலும் ஜிஎஸ்டி வரிக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மருந்துகள், காப்பீடு, சமையல் பொருள்களுக்கு ஏராளமான வரி விதிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி சாடினார்.
அதேநேரத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர், ’வரிகளின் சீரமைப்பும், பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதக் குறைப்பும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த நடவடிக்கை 8 ஆண்டுகள் தாமதமாக நடந்திருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.