“6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..” வானிலை ஆய்வு மையம்.. பிரதீப் ஜான் கொடுத்த புது அப்டேட்
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக காலை முதல் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், மயிலாப்பூர், சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதே போல, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி, திருவற்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மழையில் குடையைப் பிடித்தபடி சென்றனர்.
இந்நிலையில், காவிரி படுகைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை உட்பட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் சென்னையில் இன்று மாலை அல்லது இரவில் மழை தீவிரமடையும் என தெரிவித்துள்ளார். சென்னையில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யும், ஆனால் அதிகனமழை இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளட்ட காவிரி படுகை மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ள அவர், தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
குன்னூர், கொடைக்கானல் பகுதிகளுக்கான பயணத்தை அடுத்த 3 நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தென்தமிழகத்தில் மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்றும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மிதமான மழை பெய்யும் என்றும் சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.