வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நாள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொச்சி சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் கேரள முதல்வர் பினராய் விஜயன், அந்த மாநில அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்வு தொடர்பாக X வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், “நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் வைக்கம் போராட்டம் தொடர்பான காணொளி ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், வைக்கம் போராட்டத்தின் சுருக்கமான வரலாறு பெரியார், மகாத்மா காந்தி போன்றவர்களது பங்களிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.