ஷமியின் உடற்தகுதி மேல் எழும் கேள்விகள்.. ஆஸி செல்ல வாய்ப்பு உள்ளதா? இல்லையா?
கடந்தாண்டு உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய ஷமி, காயம் காரணமாக நீண்ட நாட்கள் விளையாடாமல் இருந்தார். தற்போது சையத் முஷ்தாக் அலி கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக ஷமி விளையாடி வருகிறார். இதில் ஷமி 8 போட்டிகளில் விளையாடி, 14 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இத்தகைய சூழல்களுக்கு மத்தியில்தான் ஷமி ஆஸ்திரேலியா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால், ஷமி இன்னும் முழு உடற்தகுதியை பெறவில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
கதவு திறந்தே உள்ளது - ரோகித்
இரண்டாவது போட்டி முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ரோகித் சர்மா, ஷமியின் உடல்நிலை குறித்து பேசினார். அவர் கூறுகையில், “நாங்கள் அவரைக் கண்காணித்து வருகிறோம். ஏனெனில், சையது முஷ்டாக் அலி தொடரில் விளையாடும்போது அவருக்கு முழங்காலில் சிறிது வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்கும், விளையாடுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வலியுடன் அவரை இங்கு கொண்டு வந்து விளையாட வைக்கும் சூழலை நாங்கள் விரும்பவில்லை. அதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். இங்கு வந்து அணிக்காக பணியைச் செய்யுமாறு அழுத்தம் கொடுப்பதற்கு நாங்கள் விரும்பவில்லை. சில வல்லுநர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். அவர்களது முடிவை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் அவரை அழைப்போம். அவர் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாம். அவருக்கான கதவு திறந்தே உள்ளது” எனத் தெரிவித்தார்.
நீடிக்கும் கேள்வி
ஷமி சையத் முஷ்தாக் அலி தொடரில் சிறப்பாக ஆடினாலும், ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியுடன் இணைவாரா என்பது கேள்வியாகவே நீடிக்கிறது. ஏனெனில், பெங்கால் கிரிக்கெட் சங்கம் மற்றும் பிசிசிஐயின் கண்காணிப்பின் கீழ் ஷமி உடற்தகுதி தேர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் இருந்து வரும் செய்திகள் எல்லாம், அவர் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதைத் தெரிவிப்பதாகவே உள்ளது.
அனைவரது கண்களும் ஷமி மேல்
சையத் முஷ்தாக் அலி டிராபியில் போட்டி ஒன்றிற்கு 4 ஓவர்களை வீசுவதே காலில் வீக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் ஷமியால் 5 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் நீண்ட ஸ்பெல்கள் வீசமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. Centre of Excellence ஊழியர்கள் ஷமியின் உடற்தகுதியின் மீது முழுமையான கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அவரது உடற்தகுதி கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதி போட்டியில் பெங்கால் அணி பரோடாவை எதிர்கொண்டு ஆடி வருகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டியில் அனைவரது கண்களும் ஷமியின் மீது மட்டுமே இருக்கும். முன்னதாக காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் போட்டியில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்கால் அணியின் முகமது ஷமி 17 பந்தில் 32 ரன்கள் அடித்தது, பெங்கால் அணியை இக்கட்டான நிலையில் வெற்றிபெற செய்ய உதவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.