தொடரும் கனமழை | தண்ணீரில் தத்தளிக்கும் திருச்சி.. கழிவு நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி!
செய்தியாளர் சார்லஸ்
திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே ஹெல்த் காலனி, சீனிவாச நகர் 2வது மற்றும் நான்காவது தெருவில் உள்ள 300- க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இடுப்பளவு தண்ணீரில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் வெள்ளநீர் புகுந்ததால் முதல் தளத்திற்கு இப்பகுதிகளில் வசிப்பவர்கள் குடியேறியுள்ளனர். வெள்ள நீர் வடியாத நிலையில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வீட்டிற்குள் மழை நீரில் நிற்கின்றன. கோரையாற்றுக்கு செல்லும் வடிகால் பாதையை முறையாக மாநகராட்சி அமைக்காததால் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரால் சூழப்பட்டு தவித்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
தென்னூர் அண்ணா நகர் பகுதியில் பாரதியார், பாரதிதாசன் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் அதிக வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கனமழையில் கழிவு நீர் கலந்து அனைத்து வீடுகளுக்குள்ளும் புகுந்தது . இதனால் வீட்டில் இருப்பவர்கள் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதேபோல திருச்சி காஜாமலை நகர் நுகர்பொருள் வாணிப சேமிப்பு கிடங்கு அருகே சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பாதாள சாக்கடைக்காக சாலை ஓரமாக சிமெண்டினாலான சிறிய சுவர் போன்று கட்டி வைத்துள்ளதால் மழை நீர் வடியாமல் சாலை முழுவதும் தேங்கியுள்ளது. பொதுமக்கள் அந்தச் சாலையில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகர ஜங்ஷன், விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 5 சென்டி மீட்டருக்கு மேல் மழை பதிவான நிலையில், மேலப்புதூர் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அந்தவழியே பேருந்து, 4 சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உருவானது. மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சிங்காரத்தோப்பு, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.