கொல்கத்தா மருத்துவர் கொலை | Ex Dean-க்கு ஜாமீன்.. “நாங்கள் மனம் உடைந்துள்ளோம்" - பெற்றோர் வேதனை!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடக்கு கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் முதுகலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு குறித்து சிபிஐ தீவிரமாக விசாரணை நடத்திவருகிறது. இந்த விசாரணையில் சமூக ஆர்வலர் சஞ்ஜய் ராய், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றம், முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மற்றும் தலா காவல் நிலையத்தின் முன்னாள் அதிகாரி அபிஜித் மொண்டல் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் சிபிஐயிடம் ஒப்படைத்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதால், 90 நாட்களுக்குள் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குடும்பத்தினர் எதிர்ப்பு
ஆனால் இதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் மருத்துவரின் தாயார், “சிபிஐ விசாரணையை விரைவுபடுத்தி குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், அந்த அமைப்பு எங்களை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதுபோல் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும், வலிமையானவர்கள் தண்டனையின்றி தப்பிக்கும் மற்றொரு வழக்காக இது இருக்குமா என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தை, “நாங்கள் மனம் உடைந்துள்ளோம். சிபிஐ நீதி வழங்கும் என்று நம்பினோம். ஆனால் இப்போது எங்கள் மகளுக்கு நீதி கிடைக்குமா என்று நாங்கள் நினைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அபிஜித் மொண்டலின் வழக்கறிஞர், “அவர் (அபிஜித்) நீதிமன்றக் காவலில் இருந்து விரைவில் விடுவிக்கப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் சந்தீப் கோஷின் வழக்கறிஞர், “ஆர்ஜி கார் மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் தொடர்பான தனி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தீப் கோஷ், பாலியல்-கொலை வழக்கில் ஜாமீன் பெற்றாலும் காவலில் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.