இந்திய நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் பெயர்.. 120 நாடுகளில் அரசியல் தலையீடு.. யார் இந்த ஜார்ஜ் சோரோஸ்?
அமளிகளால் முடங்கும் நாடாளுமன்றம்
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது வருகிறது. டிசம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தொடரில், மத்திய அரசு 16 மசோதாக்களை நிறைவேற்ற பட்டியல் இட்டுள்ளது. ஆனால், அதானி விவகாரத்தை காங்கிரஸ் கட்சிகள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதுடன், முடக்கியும் வருகின்றன. அதேநேரத்தில் பாஜக எம்பிக்களும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் ஜார்ஜ் சோரஸுக்கும் என்ன சம்பந்தம் என்கிற பிரச்னையைக் கையில் எடுத்துள்ளனர். இதனால், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம் முடக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பாஜக குற்றஞ்சாட்டும் ஜார்ஜ் சோரோஸ் யார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
யார் இந்த ஜார்ஜ் சோரோஸ்?
மிகப் பிரபலமான அமெரிக்க பெரும் கோடீஸ்வரர் மற்றும் முதலீட்டாளராக அறியப்படும் சோரோஸ், ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்டில் 1930ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் ஒரு செல்வந்த யூத குடும்பத்தில் பிறந்தாலும், 1944இல் ஹங்கேரியில் நாஜிக்களின் வருகையால் அவரது இளமைப் பருவம் சீர்குலைந்தது. வதை முகாம்களுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்க்க, அவரது குடும்பம் பிரிந்துசெல்ல வேண்டியிருந்தது. இதையடுத்து, சொரோஸ் தனது குடும்பத்துடன் 1947இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.
அவர், தத்துவத்தைப் படித்து ஒரு தத்துவஞானியாக மாற திட்டமிட்டார். அவர், தனது படிப்புச் செலவுக்காக ரயில்வே போர்ட்டர் மற்றும் வெயிட்டராக பணியாற்றினார். பின்னர் லண்டன் வணிகர் வங்கியில் பணிபுரிந்தார். அதன்பிறகு, 1956இல் நியூயார்க் நகரத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஐரோப்பியப் பத்திரங்களின் ஆய்வாளராகத் தொடங்கினார். அதன்பிறகு, பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்து சுமார் 44 பில்லியன் டாலர்கள் சம்பாதித்தார். அவற்றின் மூலம் பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் கட்டினார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காகப் போராடும் அமைப்புகளுக்கும் உதவ ஆரம்பித்தார். 2010இல் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு மட்டும் டாலர் 100 மில்லியனை நன்கொடையாக அளித்துள்ளார்.
ஒபாமாவின் அதிபர் பிரசாரத்தின் முக்கிய முகம்
1984இல் தனது செல்வத்தின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி ஓபன் சொசைட்டி ஃபவுண்டேஷன்ஸ் என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை, இப்போது சுமார் 120 நாடுகளில் செயல்படுகிறது. 2017இல் சுமார் 18 பில்லியன் டாலர்களை இந்த அறக்கட்டளை மூலம் பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், 1992இல் 'ஷார்ட் செல்லிங்' (பங்குகளை கடனாக பெற்று, பின் அதை விற்று லாபம் ஈட்டுவது) மூலமாக, கிட்டத்தட்ட பிரிட்டன் வங்கியின் சரிவுக்குக் காரணமான நபர் என்று அவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். 1997இல் தாய்லாந்தின் நாணயத்தின் (பாட்) மீதான ஊகத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், அவர் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை ஆதரிப்பதால் குடியரசு கட்சியை அடிக்கடி விமர்சித்து வருகிறார். முன்னதாக, 2022இல் ஜனநாயகக் கட்சிக்கு டாலர் 128.5 மில்லியன் நன்கொடை அளித்திருந்தார். அப்போதைய அதன் மிகப்பெரிய நன்கொடையாளர் அவரே எனக் கருதப்படுகிறது. அவர் பராக் ஒபாமாவின் அதிபர் பிரசாரத்தின் பின்னணியில் ஒரு முக்கிய முகமாக இருந்தார்.
இதற்குப் பிறகு, அவர் மீதான அமெரிக்க வலதுசாரிகளின் தாக்குதல்கள் தீவிரமடையத் தொடங்கின. கடந்த 2019ஆம் ஆண்டில், ஹொண்டுராஸில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு அமெரிக்க எல்லையை கடக்க சோரோஸ் பணம் கொடுத்ததாக கூறிய காணொளியை ட்ரம்ப் பகிர்ந்திருந்தார். ஆனால், சோரோஸ் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை என்றும், ட்ரம்ப் பகிர்ந்த வீடியோவும் போலியானது என்றும் பின்னர் தெரியவந்தது. அமெரிக்காவில் மட்டுமல்ல, ஆர்மீனியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் ஜார்ஜ் சோரோஸுக்கு எதிரான பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. அவருடைய பிறப்பிடமான ஹங்கேரி அரசாங்கமும்கூட, அவரை தனது எதிரியாகக் கருதுகிறது.
2018 தேர்தல் பிரசாரத்தின்போது, ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன், சோரோஸை அதிகம் குறிவைத்தார். மேலும், அவர், பல நாடுகளை இலக்காக வைத்து, அந்த நாடுகளின் அரசியலில் திரைமறைவாக செயல்பட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஓராண்டில் அவர் ரூ.12,000 கோடி வரை செலவிடுவதாகவும், இந்தியா உட்பட 120 நாடுகளின் அரசியலில் அவர் தலையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கதேசத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கும் இவர்தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
பாஜகவுக்கும் சோரோஸுக்கும் என்ன பிரச்னை?
”மோடி பெரிய தலைவராக வேகமாக வளர முக்கியக் காரணம், இந்திய முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையே" என ஜார்ஜ் சோரோஸ் கடந்த ஆண்டு கூறியதுமுதலே பாஜகவின் எதிர்ப்பை அவர் சம்பாதித்து வருகிறார். தொடர்ந்து, கெளதம் அதானி மற்றும் பிரதமர் மோடியைப் பற்றியும் இணைத்துப் பேசினார். ”மோடிக்கும் தொழிலபதிபர் அதானிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இருவரின் எதிர்காலமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளது” என அடுத்தடுத்து பாஜகவுக்கு எதிராக கருத்துகளைப் பகிர்ந்தார்.
இதன்காரணமாகவே பாஜகவுக்கும் சோரோஸுக்கும் முட்டல் மோதல் தொடங்க ஆரம்பித்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை, பாஜக குறிவைக்கக் காரணம், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்படும் ஆசிய பசிபிக் ஜனநாயக தலைவர்களுக்கான மன்றம்தான் (Forum for Democratic Leaders of Asia Pacific). இந்த மன்றத்துடன் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாகவும், இந்த மன்றத்திற்கு ஜார்ஜ் சோரோஸின் அறக்கட்டளை நிதியுதவி செய்வதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.