எண்ணூர் கடலில் கரை ஒதுங்கிய நான்கு இளம் பெண்களின் சடலங்கள்.. உயிரிழப்புக்கு காரணம் என்ன?
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில், 4 இளம் பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் இன்று மதியம் மூன்று மணியளவில் 4 இளம் பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எண்ணூர் போலீசார் கரை ஒதுங்கிய நான்கு பெண்களின் சடலங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். நான்கு பெண்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்க சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
குறிப்பாக நான்கு பெண்களும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது யாரேனும் தவறாக நடக்க முற்பட்டு கொலை செய்தனரா? என பல்வேறு கருத்துக்கள் வேகமாக பரவியது. எண்ணூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நான்கு பெண்களும் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், அவர்களது இறப்புக்கு வேறு நபர்கள் காரணம் இல்லை எனவும் தெரியவந்தது. குளிக்க முற்பட்டு கடலில் இறங்கிய போது ஒன்றன்பின் ஒன்றாக நான்கு நபர்களையும் கடல் அலை இழுத்துச் சென்றதில் உயிரிழந்தார்கள் என தெரியவந்தது.
குறிப்பாக இறந்த நான்கு பெண்களும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் நான்கு நபர்களும் கும்மிடிப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
கும்மிடிப்பூண்டி ஏலாவூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி(18) என்பவர் அவரது நண்பர்களான கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்த தேவகி செல்வம், பவானி, காயத்ரி உள்ளிட்ட நான்கு நபர்கள் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த தேவகி செல்வம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது. குறிப்பாக, கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஷாலினி ப.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்ததும், இவர் பகுதி நேரமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அவரோடு தேவகி செல்வம், பவானி, காயத்ரி ஆகிய மூவரும் அதே துணிக்கடையில் பணிபுரிந்து வந்த போது பழக்கம் ஏற்பட்டு பின்பு நண்பர்கள் ஆனதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு ஷாலினி, தான் பகுதி நேரமாக பணிபுரியும் துணி கடைக்கு சென்று அங்கு இருந்த மற்ற மூவரையும் அழைத்துக் கொண்டு ரயில் மூலமாக சென்னை எண்ணூர் கடற்கரைக்கு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. நான்கு நபர்களும் கடற்கரைக்கு வந்த நிலையில் கடலில் இறங்கி குளிக்க முற்பட்டபோது, அதில் ஒருவர் அலையில் சிக்கியதும், அடுத்த நபர் காப்பாற்ற முற்பட்டுள்ளார். இதேபோல நான்கு நபர்களும் கடலலையில் சிக்கி உயிரிழந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.
உயிரிழந்த 4 பெண்களின் உடல்களையும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்த எண்ணூர் போலீசார் நான்கு பெண்கள் உயிரிழப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு இளம் பெண்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

