“பாஜகவிற்கு மேலொரு தலைமை உள்ளது; அவர்கள் மோடி பிரதமரா என இன்னும் கூறவில்லை” - செல்லூர் ராஜூ சூசகம்!
செய்தியாளர்: மணிகண்டபிரபு
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது குடும்பத்தினருடன் வந்து மதுரை மீனாட்சி மகளிர் அரசினர் கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விகளையும் அதற்கு அவர் அளித்த பதில்களையும் இங்கே பார்க்கலாம்...
தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளாரே?
“பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானல் வரும், ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டான்”
பாஜக 400 சீட்களை வெல்லுமா?
“ஹா ஹா ஹா... ஆண்டவனுக்குதான் வெளிச்சம். தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். தமிழர்களின் உரிமையை மீட்பதும் பலத்தை காப்பாற்றுவதும் அதிமுகவின் கொள்கை.
இந்தியா கூட்டணியில் கூட யார் பிரதம வேட்பாளர் என கூறவில்லை. பாஜக கூட்டணியில்தான் மோடி பிரதமர் வேட்பாளர் என கூறுகிறார்கள். பாஜகவிற்கு மேலாக ஒரு தலைமை உள்ளது, அவர்கள் மோடி பிரதமர் வேட்பாளர் என இன்னும் கூறவில்லை. பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் பிரதமராக ஒருவரே பதவிவகிக்க முடியாது எனக் கூறுவார்கள். எனவே தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் என தெரியவரும்.
மக்கள்தான் எஜமானர்கள். மக்கள் முடிவு செய்பவர்கள்தான் பிரதமராக வர முடியும். தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்குதான் எங்கள் ஆதரவை நாங்கள் தருவோம். தமிழ்நாடு என்பது திராவிட பூமி. ஆகவே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது” என்றார்.