“ஜான் மார்ஷலை கௌரவிப்பது தமிழ்நாடு அரசிற்கு பெருமை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தியாளர்: முருகேசன்
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் மற்றும் சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலாளர் சந்திர மோகன் கலந்து கொண்டனர்.மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் இந்நிகழ்வில் தொல்லியல் துறை பேராசியர்கள் கிரெக் ஜாமிசன், நயன்ஜோத் லஹிரி, டோனி ஜோசப் உள்ளிட்டார்களும் கலந்து கொண்டனர். இந்த சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கம் இன்று முதல் வருகின்ற 7 ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெற உள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொர்ந்து சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்; ஒரு வடிவவியல் ஆய்வு என்னும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் இந்நிகழ்வில் சிந்து சமவெளி வரலாற்று ஆய்வாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன் உள்ளிட்ட தொல்லியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிந்து சமவெளி உலோக காளையின் மாதிரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நினைவு பரிசாக வழங்கினார்.
மேலும் சிந்துசமவெளி பண்பாடு குறித்தான காணொளி காட்சிகளும் ஔிப்பரப்பபட்டது.
முதல்வர் உரை:
பின்னர் இந்த விழாவின் மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“2021 ஆண்டு இந்த அரசு அமைந்ததும் இது அரசியல் கட்சி அல்ல எனவும் இனத்தின் அரசு எனவும் நான் குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா நடைபெற்று வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசு முன் நின்று நடத்தாத வகையில் மாபெரும் பண்பாட்டு விழா இப்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிந்துவெளி நாகரிக பண்பாட்டு விழா நடத்துவது அரசின் கடமை. ஏனெனில் இந்த நாகரிகம், இந்திய துணை கண்டத்தின் வரலாற்றில் திருப்பு முனையை உருவாக்கி கடந்தகாலம் பற்றிய புரிதலை மாற்றி அமைத்தது. ஆரியமும் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் மூலமென சொன்னார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷல் அவர்களின் ஆய்வு அறிக்கைதான். தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களும் சிந்து வெளி நாகரிகம் குறித்து சர் ஜான் மார்ஷல் அவர்களை பாராட்டி எழுதியிருக்கிறார்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களும் செம்மொழி மாநாட்டு நிகழ்வில் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ சிந்துவெளி குறியீட்டையும் வெளியிட்டார். நம் வரலாற்றையும் பெருமையையும் மீட்டவர் ஜான் மார்ஷல். அவரை கௌரவிப்பது தமிழ்நாடு அரசிற்கு பெருமை” என கூறினார்.
3 முக்கிய அறிவிப்புகள்:
பின்னர் மூன்று முக்கிய அறிவிப்புகளை விழாவின் மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி,
உலக அளவில் உள்ள தொல்லியல் அறிஞர்கள், தமிழகம் வருகை புரிந்து இங்கு உள்ள சிந்துவெளி எழுத்து முறையை வெளியே கொண்டு வரும் நபர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்கன் டாலர் வழங்கப்படும்.
சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சி மேற்கொள்ள தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க 2 கோடி ரூபாய் நல்கை வழங்கப்படும்
கல்வெட்டு ஆய்வாளர்கள் ஆகியோர்களை ஊக்கவிக்கும் வகையில் ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்
என அறிவித்தார்.
பின் தொடர்ந்து பேசிய முதல்வர், “தமிழ்நாட்டில் 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. ஆராய்ச்சி முடிவுகள் மகிழ்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது. சிந்துவெளி நாகரிகத்தின் குறியீடுகளும் தமிழ்நாட்டில் கிடைக்கப்பெற்ற குறியீடுகளும் 60 விழுக்காடு ஒரே தன்மையில் காணப்படுகிறது” என தெரிவித்தார்.
அமைச்சர் தங்கம் தென்னரசு உரை:
முன்னதாக இந்த விழாவின் மேடையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், “சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்திய எழுத்துகள் இன்றுவரை புரியாத புதிராகத்தான் உள்ளது. சிந்துவெளி நாகரிகத்தின் எழுத்துகளை தற்போது வரை படிக்க முடியவில்லை. சிந்துவெளி நாகரிகம் தொடர்புடைய நாகரிகம் எது என கண்டறிய முடிய வில்லை. சில வரலாற்று அறிஞர்களின் ஆய்வு மற்றும் குறியீடுகள் மூலம் திராவிட நாகரிகம் என்று சொல்லப்படுகிறது.
கீழடியில் கிடைத்த திமில் உள்ள காளை குறியீடுதான் சிந்துவெளியில் உள்ள காளையின் குறியீடு. சிந்துவெளி நாகரிகத்தில் பல விலங்குகள் உள்ளன. ஆனால் குதிரை மட்டுமில்லை. அது ஒன்றே அது திராவிட நாகரீகம் என்பதற்கு சான்று. அறிவியல் பூர்வமாக வரலாற்று ஆய்வுகளை நாம் அணுகவேண்டும்” என தெரிவித்தார்.
உதயசந்திரன் உரை:
இந்த விழாவின் மேடையில் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறையின் முதன்மை செயலளார் உதயசந்திரன் பேசியதாவது:
“முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 6 லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். கீழடி அகழாய்வு முடிவுகளை தற்போது வெளியிட போவது இல்லை. கீழடி என்ற ஒற்றை சொல் உலக தமிழர்களை ஒன்று சேர்த்து உள்ளது. இந்தியாவின் வரலாறு தமிழகத்தில் இருந்துதான் தொடங்கும் நிலை ஏற்படும். கீழடி ஆய்வின் துவக்க முடிவுகள் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது.
அவரசரமாக கீழடி ஆய்வு முடிவுகளை தற்போது வெளியிட போவது இல்லை. உலகின் சிறந்த அறிவியல் ஆய்வகங்களில் ஆய்வு முடிவுகளை ஆய்வு செய்த பின் வெளியிடப்படும். அறிவியல் பூர்வமாக சான்றுகளின் அடிப்படையில் கீழடி ஆய்வு முடிவுகளை உறுதிசெய்யத பின் வெளியிட உள்ளோம்” என தெரிவித்தார்.
இந்த விழாவின் மேடையில் தலைமைச்செயலாளர் முருகானந்தம் பேசுகையில், “தமிழ் மொழியே திராவிட மொழிகளின் தாய் மற்றும் ஆரியமொழிகளுக்கு மூத்த மொழி என அறிவியல் பூர்வமாக ஆதாரத்துடன் உலகறிய செய்வோம். யாரும் நமது மொழியை தமிழரின் பெருமையை மறைக்க முடியாது” என தெரிவித்தார்.
இறுதியாக சுற்றுலா மற்றும் பண்பாடு அறநிலையத்துறையின் முதன்மை செயலளார் சந்தர மோகன் நன்றியுரை தெரிவித்தார்.