இடைக்கால பட்ஜெட்| ”சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம்; AI திறன் முன்னேற்றம்” - தங்கம் தென்னரசு!
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்வதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைகிறது.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு அமைவது வரையிலான அரசின் செலவினங்களுக்கான நிதிஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும். சட்டமன்றத் தேர்தலுக்குமுன் தாக்கலாகும் பட்ஜெட் என்பதால் மக்களை கவரும் வகையில் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்
சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம்..
தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசித்துவரும் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வரும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசை பாராட்டினார்.
உரையில் பேசிய அமைச்சர், கடைக்கோடி தமிழரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் பங்குபெறும் சூழல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் வறுமையை ஒழிக்கும் இறுதிப் போரை நாம் தொடங்கியிருக்கிறோம். நமது திட்டங்களை பிற மாநில அரசுகளும் பின்பற்றத் தொடங்கியுள்ளன, இருப்பினும் ஒன்றிய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை ஒரு புறம் இருந்துவருகிறது.
திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி, பொருநை அருங்காட்சியகங்கள் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. சோழர் அருங்காட்சியகம், நொய்யல், எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெண்கல அருங்காட்சியகம், திருவண்ணாமலையில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகங்கள் 287 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.
அயல்நாடுகளில் வாழும் தமிழர்களுக்காக ஜனவரி 11,12 ஆம் தேதி அயலக தமிழர் தினம் கொண்டாடப்படுகிறது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வகையில் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ் ஆசிரியர்கள், கலைஞர்களை கொண்டு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான பணிகளும் பத்து கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன.
மிகப்பெரும் அளவில் வெளிநாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் அதே நேரத்தில் சிறு குறு தொழிலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உணவு உற்பத்தியில் வரலாறு காணாத சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளோம். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அறிவுசார் பொருளாதாரத்தில் தமிழக இளைஞர்கள் சிறந்து விளங்கிடும் வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாவட்டம் தோறும் தொழில் பூங்காக்கள், மேம்பாலங்கள், பறவைகள் சரணாலயங்கள், பசுமை வழிப்பயணத்திற்கு உரிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் 3 மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது” என்று பேசினார்.
