‘ஆட்சியில் உறுதியாக பங்கு’| 4 கோரிக்கை பதாகைகள்.. வேணுகோபாலை வரவேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள்!
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிக்கையால் குழப்பம் நீடிக்கிறது. காங்கிரஸ் தரப்பில் ஆட்சி பங்கு கோரிக்கையை முன்வைக்க, திமுக மறுக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தமிழகம் வந்தார். அவரை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள் 4 கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் காத்திருந்தனர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையால் குளறுபடி நீடித்துவருகிறது. காங்கிரஸ் தரப்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்கப்படும் நிலையில், திமுக தரப்பிலிருந்து கூட்டணி ஆட்சி என்பது கிடையாது என திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க திமுக - காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள உரசலுக்கு காங்கிரஸ் எம்.பி. கே.சி.வேணுகோபால் தான் காரணம் என கூறப்படும் நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் வேணுகோபால் ஒரு ரௌடி என விமர்சித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி கூட்டணி சர்ச்சைகளுக்கு இடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இன்று தமிழகம் வந்தார்.
ஆட்சியில் உறுதியாக பங்கு..
இந்தசூழலில் தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை, சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்றார். வேணுகோபாலின் வருகை கூட்டணி சார்ந்த குளறுபடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஆனால் விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை வரவேற்க காத்திருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் “ஆட்சியில் உறுதியாக பங்கு வேண்டும்’ உட்பட 4 கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் வரவேற்றது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் வைத்திருந்த பதாகைகளில், ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும், திமுக காங்கிரஸ் கூட்டணியில் உரிய மரியாதை, வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்கள் வரை பங்கு வழங்கப்பட வேண்டும், உள்ளாட்சி தேர்தல்களிலும் 30% பங்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வருகையின் போது நிர்வாகிகள் கையில் வைத்து இருந்தனர்.

