TVK Vijay Madurai Conference| விஜய்யின் பிரம்மாண்ட மாநாட்டு அரங்கத்தில் ஒரு விசிட்!
மதுரையில் நடைபெறும் தவெக மாநாடு, பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன், 700 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறுகிறது. 100 அடி உயர கொடிக் கம்பம், 500 பேர் அமரக்கூடிய மேடை, 350 மீட்டர் நீள ராம்ப் வாக் மேடை என, விஜய்யின் வருகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்கான 'பிங்க் ரூம்', குடிநீர் வசதிகள், மருத்துவ உதவிகள் என அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தயாராகும் தவெக
வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற முழக்கத்துடன் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தவெக தயாராகி வருகிறது. முதல் மாநாட்டில் மக்கள் வெள்ளம் அலைமோதியதால் ஏற்பட்ட சில சவால்களை, இந்த முறை கடந்துவிட வேண்டும் என்பதற்காக, மாநாட்டு ஏற்பாடு பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. விக்கிரவாண்டி வி.சாலையில் 120 ஏக்கரில் விஜயின் முதல் மாநாடு நடந்தது. இந்த முறை மதுரையில் நடைபெறும் 2ஆவது மாநாட்டுக்கான திடல், 250 ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட மேடை அமைப்பு
மதுரையில் நடைபெறும் 2ஆவது மாநாட்டுக்கான திடலில் பார்க்கிங் வசதிக்காக 450 ஏக்கர் என, ஒட்டுமொத்தமாக 700 ஏக்கர் நிலப்பரப்பு மாநாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 100 அடி உயர கொடிக் கம்பத்தில் விஜய் கட்சி கொடியை ஏற்றி வைக்க உள்ளார். மாநாட்டின் இதயமாக, 500 பேர் அமரக்கூடிய, 214 மீட்டர் நீள பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில், விஜய் உட்பட கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அமர உள்ளனர்.
இதில் மிகவும் கவனிக்கத்தக்க அம்சம், விஜய்யின் ராம்ப் வாக் மேடை. இந்த முறை 350 மீட்டர் நீள ராம்ப் வாக் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை ரசிகர்கள் ராம்ப் வாக் மேடையின் மீது ஏறியதால் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்க, 10 அடி இடைவெளியும், 8 அடி உயரமும் கொண்ட, 100 கிலோ எடை கொண்ட தடுப்புக் கம்பிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளது. ராம்ப் வாக் மேடையின் இருபுறமும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில், தலா 30 என, மொத்தம் 60 பாக்ஸ்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்காக 'பிங்க் ரூம்' ரெடி
மாநாட்டிற்கு வரும் பெண்களுக்காக 'பிங்க் ரூம்' என்ற பெயரில் 3 பிரத்யேக நவீன அறைகள் அமைக்கப்படுகின்றன. கடந்த முறை ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, ஒவ்வொரு பாக்ஸிலும் 8 குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 600 குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட உள்ளது. இதைத் தவிர, 100 குடிநீர் டேங்குகள், 5 லட்சம் குடிநீர் பாட்டில்கள் எனப் பெரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அடிப்படை வசதிக்கு முக்கியதுவம்
கூட்ட நெரிசலில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு மருந்துகள், தண்ணீர் போன்றவற்றை உடனடியாகக் கொண்டு சேர்ப்பதற்காக, 25 கிலோ எடை வரை சுமக்கும் திறன் கொண்ட பெரிய ட்ரோன் பயன்படுத்தப்பட உள்ளது. 200க்கும் மேற்பட்டோரைக் கொண்ட மருத்துவக் குழுக்கள், 400 கழிவறைகள், 2500க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் என மக்கள் வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் வருகைக்கு தனி வழி அமைப்பு
மின்சார வசதிக்காக, அனைத்து வயர்களும் தரையில் புதைக்கப்பட்டு, 100க்கும் மேற்பட்ட ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. பொதுமக்கள் வருகைக்கு 7 வழிகள், விஜய்யின் வருகைக்கு தனி வழி என, பாதுகாப்பு அம்சங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் தவெக மாநாடு வெறும் கூட்டம் சேர்க்கும் நிகழ்வாக மட்டும் இல்லாமல், விஜய்யின் அரசியல் எதிர்காலத்திற்கு ஒரு புதிய திசையைக் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.