“அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்” - விஜய்க்கு EPS விடுக்கும் மறைமுக அழைப்பா?
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என தவெக தலைவர் விஜய் திட்டவட்டமாக கூறியிருந்த நிலையில், திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மறைமுகமாக விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
திமுக அரசை வீழ்த்த வேண்டுமென்ற ஒற்றை குறிக்கோளுடன் அமைந்துள்ளது, அதிமுக-பாஜக கூட்டணி. அதேநேரம் தங்களது கூட்டணிக்குள் மேலும் சில கட்சிகள் வருமென அதிமுகவும், பாஜகவும் தொடர்ந்து கூறிவந்தன. மறுபுறம், திமுகவை கொள்கை எதிரி எனக் குறிப்பிட்டு கட்சியைத் தொடங்கியவர், விஜய். தொடர்ச்சியாக திமுக மற்றும் பாஜகவை மட்டுமே அவர் விமர்சித்து வந்ததால், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என அரசியல் களத்தில் பேசப்பட்டன.
இந்த சூழலில், தவெக மாநில செயற்குழு கூட்டத்தில் பேசிய விஜய், கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். அதிமுகவையும் விமர்சித்திருந்த விஜய், “சுய அரசியல் லாபங்களுக்காக பாஜகவுடன் கூடிக் குலைந்து கூட்டணி போக திமுகவோ அதிமுகவோ இல்லை தவெக. கூட்டணி என்றாலும் தவெக தலைமையில் அமையும் கூட்டணி திமுக மற்றும் பாஜகவிற்கு எதிரானதாகத்தான் இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சிற்கே இடமில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஆட்சியில் இருந்து திமுக அகற்றப்பட வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்தால் வரவேற்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக தொடர்பாக விஜயின் கருத்துக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விமர்சனத்தைக் கூறுவார்கள். அந்தவகையில் விஜயும் ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார்” எனத் தெரிவித்தார். தவெகவிற்கு கூட்டணி தொடர்பான அழைப்பை விடுப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த இபிஎஸ், “மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அதில் ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் இணைந்து தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம். திமுக அகற்றப்பட வேண்டுமென யாரெல்லாம் எண்ணுகிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்பது எங்கள் கருத்து” எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே, அதிமுக, தவெக கூட்டணி அமைத்து 2026 தேர்தலை சந்திக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பழனிசாமி இவ்வாறு பேசியிருப்பது கூட்டணிக்கான மறைமுக அழைப்பாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, விஜயுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி புதுதிட்டத்தை கையிலெடுக்கிறாரா எனவும் கேள்வி எழுந்துள்ளது.