அண்ணா விமர்சன விவகாரம்: “ஒருநாள், ஒரு நொடி கூட" திமுகவின் விமர்சனத்திற்கு இபிஎஸ் காட்டமான எதிர்வினை
“ஒருநாள், ஒரு நொடி கூட எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்”. கிட்டத்தட்ட நான்கு நாள்களுக்குப் பிறகு இந்து முன்னணியின் அண்ணா குறித்த விமர்சனத்துக்கு வாய்திறந்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.
'இந்து முன்னணி மேடையில் அதிமுக முன்னணித் தலைவர்கள் முன்னணியிலேயே அண்ணாவும் பெரியாரும் விமர்சிக்கப்பட அமைதியாக இருந்தது ஏன்?' என விமர்சனக் கணைகள் பறந்தன. அதிமுக தலைவர்கள் பலர் விளக்கமளித்தபோதும், 'எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கவேண்டும்' என்கிற குரல்கள் எழுந்தன. இந்தநிலையில் தற்போது அறிக்கையின் வாயிலாக பதிலளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. நடப்பது என்ன விரிவாகப் பார்ப்போம்.
முருக பக்தர்கள் மாநாடு
மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உட்பட ஏராளமானோர் மாநாட்டில் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் இந்து முன்னணியின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் பெரியார், அண்ணா மற்றும் திராவிட சித்தாந்தம் குறித்து விமர்சிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக தலைவர்கள் முன்னிலையிலேயே அவர்களது கொள்கை தலைவர்களான பெரியார், அண்ணா குறித்து விமர்சன வீடியோ வெளியிடப்பட்டது தமிழக அரசியல் அரங்கில் பேசுபொருளானது.
இந்த விவகாரத்தில் திமுகவினர் மிகக் கடுமையாக அதிமுகவை விமர்சனம் செய்தனர். தொடர்ந்து, “அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையோ, உறுதிமொழிகளையோ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த யாரும் ஏற்கவில்லை” என அதிமுக ஐ.டி விங் சார்பாக விளக்க அறிக்கை வெளியானது. “முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா விடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை. அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவரும் அறிவார்கள்” என அதிமுக முன்னாள் அமைச்சர்களும் விளக்கம் அளித்தனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் வாய் திறக்கவில்லை என எதிர்கட்சிகள், அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பினர்.
குறிப்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில், “உங்க கொள்கை மேலயே கை வைக்குறாங்க. உங்க கொள்கைத் தலைவர்களை விமர்சிக்குறாங்க. உங்க கட்சி யார் பேர்ல இயங்குதோ அந்தத் தலைவரையே அதர்மம், போலி திராவிடம் எனப் பேசுறாங்க. எடப்பாடி பழனிசாமி எங்கே போனார். திமுக சுட்டிக்காட்டிய பிறகும் அமைதியாக இருக்கிறார். அவரின் பேரில் அறிக்கை வந்திருக்க வேண்டாமா?” எனக் காத்திரமாகக் கேள்விகளை எழுப்பியிருந்தார்..,
பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை
இந்தநிலையில் இன்று எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதில்.., “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அதிமுக வைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதல்வர், ‘அண்ணா பெயரை அ.தி.மு.க. அடமானம் வைத்துவிட்டது’ என்கிறார். ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்சன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கு ஈ.வெ.ரா., அண்ணாவைப் பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!
இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்? கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழகத்தை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழக மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுக-வை 2026ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.