11 கோடி சமஸ்கிருதத்துக்கா? அண்ணாமலையின் கேள்விக்கு திமுகவின் பதிலென்ன?
“மத்தியில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் தமிழைவிட சமஸ்கிருதத்துக்கு அதிக நிதி ஒதுக்கியபோது எங்கு சென்றீர்கள். கடந்த ஆண்டு சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை 11 கோடி செலவிட்டதே அது எதற்காக என்று கூறமுடியுமா?” என அடுக்கடுக்கான கேள்விகளை தமிழக முதல்வரை நோக்கி முன்வைத்திருக்கிறார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
‘போலிப்பாசம் தமிழுக்கு.. பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு’ என மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு அதிக பணம் செலவிடுவது குறித்து முதல்வர் விமர்சித்திருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் கருத்துத் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. நடப்பது என்ன விரிவாகப் பார்ப்போம்.
2014 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 11 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த மத்திய அரசு ரூ.2532.59 கோடியை செலவிட்டுள்ளது. இது மற்ற 5 பாரம்பரிய இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகியவற்றிற்கு மொத்த செலவான ரூ.147.56 கோடியைவிட 17 மடங்கு அதிகம் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) மூலம் தெரிய வந்துள்ளது.
போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு
சமஸ்கிருதத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக ரூ.230.24 கோடியும், தமிழ் உள்ளிட்ட மற்ற ஐந்து மொழிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.13.41 கோடியும் செலவு செய்துள்ளது மத்திய அரசு. தமிழுக்கு மொத்தம் ரூ.113.48 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது சமஸ்கிருதம் பெற்ற தொகையை விட 22 மடங்கு குறைவு. தமிழைவிட தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒரியா மொழிக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் கிட்டத்தட்ட 9 கோடிப்பேர் பேசும் தமிழ் மொழிக்கு குறைவான நிதியை ஒதுக்கிவிட்டு ஆயிரக்கணக்கானோர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்துக்கு அதிகமான தொகை ஒதுக்கியிருப்பது கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து என் சமூக வலைதளப் பக்கத்தில் “சமஸ்கிருதம் கோடிக்கணக்கில் பணம் பெறுகிறது. தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிகளுக்கு முதலைக் கண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. போலிப் பாசம் தமிழுக்கு; பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு!” எனப் பதிவிட்டு தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.
சமஸ்கிருதத்துக்கு ரூ.11 கோடி
முதல்வரின் இந்த விமர்சனத்துக்கு தன் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள அண்ணாமலை., “நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்?
கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் குறித்து திமுக செய்தித் தொடர்பாளர்களைத் தொடர்புகொள்ள, விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என பதிலளித்தனர். விளக்கம் தரும் பட்சத்தில் அதனையும் தெரிவிக்கிறோம்.