”திமுக கூட்டணியில் அழுது கொண்டே சிரிக்கின்றனர்; என்.டி.ஏ-வில் பிரச்னை இல்லை - கே. பழனிசாமி!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாஜகவுக்கு - 27 தொகுதிகளும், பாமகவுக்கு - 18 தொகுதிகளும், அமமுகவுக்கு - 11 தொகுதிகளும், த.மா.காவுக்கு 5 இடங்களும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 இடங்களும், ஜான் பாண்டியன் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சிக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, அதிமுக, திமுக, நாதக ஆகிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தவெகவின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தவெக மற்றும் திமுக என இருமுணைப் போட்டி நிலவுவதாகவுமே பேசியிருக்கிறார். இந்த சூழலில் தான், நெல்லை, குமரி, சங்கரன்கோவில், கோவில்பட்டியில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் கே. பழனிசாமி சென்னையில் இருந்து விமான மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் சொன்னால் சொல்லிவிட்டு போகிறார். தேர்தல் முடிந்தால் தான் தெரியும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. திமுக கூட்டணியில் உள்ளவர்கள் கூட சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது என்று குறிப்பிடுகின்றார்கள். தூத்துக்குடியில் கூட 12 ஆம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்டார். இது தான் சான்று. அதேபோல, திமுக கூட்டணி 23 நாட்கள் பேச்சுவார்த்தை பேசிக்கொண்டு இறுதி செய்யப்பட்டது. திமுக காங்கிரஸ் 18 நாட்கள் வார்த்தை போர். திமுக கூட்டணியில் மன வருத்தத்தில் இருப்பதாக மதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள். அழுது கொண்டே சிரிக்கிறேன் என்றும் அந்தக் கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறி இருக்கிறார். ஆனால், அதிமுக கூட்டணி எந்த சிறு அளவு கூட பிரச்சனை இல்லை” எனத் தெரிவித்திருக்கிறார்.

