தொகுதிப் பங்கீட்டில் சிக்கலா..? தவெக உடன் கூட்டணியா..? அமித் ஷாவை சந்தித்தபிறகு EPS விளக்கம்!
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை. சந்திப்பின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் சிக்கல் இல்லை என எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில், மத்திய அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்கு சென்ற அவர், கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கீடு செய்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.
சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு 11.45 மணியளவில் நிறைவு பெற்றது. அமித்ஷாவுடனான ஆலோசனை தொடர்பான விவரங்களை எடப்பாடிபழனிசாமி இன்று வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தவெக உடன் கூட்டணியா..?
அமித் ஷா உடனான சந்திப்பிக்கு பின் டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், கூட்டணியில் சிக்கல் இருப்பதாகவும், வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை பிரிக்க கூட்டணி கட்சிகளுடன் மோதல் இருப்பதாகவும் சொல்லப்படுகிறதே என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த இபிஎஸ், கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை, அப்படி இருந்தாலும் நாங்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போகிறோம். இன்னும் 4 நாட்களில் அனைத்து விவரங்களும் வெளியிடப்படும். எங்களுக்கு வெற்றிவாய்ப்பு என்பது 234 தொகுதிகளிலும் இருக்கிறது, யாருக்கு எந்த கூட்டணி என்பது குறித்து பேசி முடிக்கப்படும் என்று கூறினார்.
தவெக உடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, அவங்களும் சொல்லிட்டாங்க, நாங்களும் சொல்லிட்டோம். தவெக தலைவரும் சொல்லிட்டாரு, அதிமுக பொதுச்செயலாளர் நானும் சொல்லிட்டன், எங்களுக்குள் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. கூட்டணிக்கு தலைமை அதிமுக தான், அதிமுகவின் தலைவர்களுடன் தவெக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, பாஜக உடனும் நடத்தவில்லை என்று கூறினார்.

