நாதக சீமான் தேர்தல் அறிக்கை
நாதக சீமான் தேர்தல் அறிக்கைpt

'இலவச கல்வி, மருத்துவம் to பாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை' - சீமானின் அதிரடி தேர்தல் அறிக்கை!

மற்றவர்களை போல அல்லாமல் கல்வி, மருத்துவம் மற்றும் குடிநீர் மூன்றும் இலவசமாக வழங்கப்படும் என்றும், நிலமும் வளமும் என்ற பெயரில் இயற்கை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் என்றும் சீமான் அறிவித்துள்ளார்.
Published on
Summary

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது. வழக்கமான வாக்குறுதிகளாக இல்லாமல், ஆட்சி முறையில் அதிரடியான மாற்றங்களை முன்மொழிந்துள்ள இந்த அறிக்கையில் என்னென்ன இடம்பெற்றுள்ளன என்பதைப் விரிவாகப் பார்ப்போம்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த 'செயற்பாட்டு வரைவு' அறிக்கையை வெளியிட்டார். இதன் மிக முக்கியமான அம்சமாக, தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் நிர்வாக வசதிக்காக மாநிலத்திற்கு ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமான்
சீமான்

அதன்படி,

மதுரை - மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகராகவும்,

சென்னை - தொழில்நுட்பத் தலைநகராகவும்,

கோவை - தொழில் தலைநகராகவும்,

கன்னியாகுமரி - தமிழர் மெய்யியல் தலைநகராகவும்,

திருச்சி - நிர்வாகத் துறை தலைநகராகவும்,

மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை ஆகியவை அங்கேயே இடமாற்றம் செய்யப்படும்.

அரசியல் அதிகாரப் பகிர்வில் புதிய மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில், சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு எனத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, "இனி படிக்காதவர் எவருமில்லை" என்ற நிலையை உருவாக்கி, தகுதியுள்ள அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நாதக சீமான் தேர்தல் அறிக்கை
நட்சத்திர தொகுதி | மதுரை மேற்கில் ஹாட்ரிக் அடித்த செல்லூர் ராஜு.. இந்த முறை வெல்வாரா..?

இலவச குடிநீர், பாலியல் குற்றத்திற்கு மரணதண்டனை..

சூழலியல் சார்ந்த திட்டங்களில், பல கோடி பனை மரங்களை நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், பனை மரம் தமிழகத்தின் தேசிய மரமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்களின் அடிப்படைத் தேவையை நிறைவு செய்ய, குடிநீர் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டு, அரசாங்கமே சுத்தமான குடிநீரை இலவசமாக விநியோகம் செய்யும்.

சட்டம் மற்றும் தேர்தல் சீர்திருத்தங்களில் சில அதிரடி மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வழிவகை செய்யப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் பழைய வாக்குச் சீட்டு முறை கொண்டு வரப்படும். குறிப்பாக, வாக்குப்பதிவைக் கட்டாயமாக்கும் வகையில், 100 சதவீதம் வாக்களித்ததற்கான அரசின் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அரசின் சலுகைகள் வழங்கப்படும் என சீமான் நிபந்தனை விதித்துள்ளார்.

சீமான்
சீமான்

மாநில உரிமைகள் தொடர்பாகப் பேசுகையில், மத்திய அரசுக்கு 25 சதவீத வரியும், மாநில அரசுக்கு 75 சதவீத வரியும் வழங்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்குக் கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கச் சட்ட மாற்றங்களுக்காகப் பாடுபடுவோம் என்றும், நிர்வாக வசதிக்காக மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதி எனத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாகத் தனது ஆட்சி தத்துவம் குறித்துப் பேசிய சீமான், "மக்களின் கருத்துக்கு ஒரு அரசு இயங்க முடியாது, மக்களின் நலனுக்காக மட்டுமே இயங்க முடியும்" என்று குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், தனது ஆட்சி 'தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சியாக' இருக்கும் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

நாதக சீமான் தேர்தல் அறிக்கை
துரந்தர் 2 படத்தில் பிரதமர் மோடி.. முதல் பாகத்தில் மோடிக்காக வைக்கப்பட்ட வசனம்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com