\
Edappadi K Palaniswami criticism on Vijays TVK Govt
விஜய், எடப்பாடி பழனிசாமிPt web

”பொய்க்கால் குதிரையின் நடனம் சில காலம்தான்..” - முதல்வர் விஜயை சரமாரியாக தாக்கிய இபிஎஸ்!

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பின்போதுகூட, அதிமுகவின் ஒரு பிரிவினர் ஆதரவுக்கரம் நீட்டினர். இதனால், தவெக மேலும் பெரும்பான்மையைப் பெற்றது.
Published on

”தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அதிமுகவின் முதுகில் குத்தி உள்ளது" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றாலும், திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அவ்வாட்சியின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போதுகூட, அதிமுகவின் ஒரு பிரிவினர் ஆதரவுக்கரம் நீட்டினர். இதனால், தவெக மேலும் பெரும்பான்மையைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அதிமுக இரண்டாக பிளவுபட்டிருப்பது வெளியில் பகீரங்கமாகவே தெரியவந்தது. இதன் பின்னணியில், குதிரைப் பேரம் நடைபெற்றதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ’தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அ.தி.மு.க-வின் முதுகில் குத்தி உள்ளது. பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், தி.மு.க-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், தி.மு.க ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edappadi K Palaniswami criticism on Vijays TVK Govt
இரண்டாக உடைந்த அதிமுக.. அதிரடி காட்டும் இபிஎஸ்.. கட்சிப் பதவிகள் பறிப்பு!

மேலும் அதில், “இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள். ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிஎக்ஸ் தளம்

நமக்கு வாக்களித்த மக்களையும், அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் கொடுத்த கழகத்தையும் நம்புங்கள். எல்லா கட்சிகளிலும் பிரச்சனைகள் உள்ளன. அதேபோல், நமது கட்சியிலும் பிரச்சனை இருப்பின் அதை நாமே பேசி தீர்த்துக்கொள்வோம். ஐந்து கட்சிகளின் ஆதரவில் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் இந்த பொய்க்கால் குதிரையின் நடனம் சிலகாலம்தான். கழகத்தின் காவல் தெய்வங்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய நம் இருபெரும் தலைவர்களின் புகழ் இருக்கும் வரை, அ.தி.மு.க செழித்து வளரும். அம்மாவின் ஆட்சி விரைவில் அமையும்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Edappadi K Palaniswami criticism on Vijays TVK Govt
உடையும் அதிமுக? ஓரங்கட்டப்படும் இபிஎஸ்? வேலுமணிக்கு பெருகும் ஆதரவு.. நடப்பது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com